ஒரு திரைப்படம் வெளியாகி, வரவேற்பைப் பெற்று, ஓடிடிக்கு நகர்ந்து சமூகவலைதளங்களில் பாராட்டுகள் பொழிவதற்குள், அதே நட்சத்திரத்தின் அடுத்த படம் குறித்த ‘அப்டேட்’கள் வருவது சாதாரண விஷயமில்லை. மலையாள நட்சத்திரம் மோகன்லாலின் ரசிகர்களுக்கு அந்த கொடுப்பினை இருக்கிறது போலும்.
எல்2: எம்புரான், துடரும் படங்களை அடுத்து, இப்போது அவர் நடித்துள்ள ‘ஹ்ருதயபூர்வம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இப்படத்தினை இயக்கியிருப்பவர் மலையாள சினிமாவில் ‘பேமிலி ட்ராமா’வுக்கு பெயர் போன இயக்குனர் சத்யன் அந்திக்காடு.
இதில் மாளவிகா மோகனன், ‘பூவே உனக்காக’ சங்கீதா, ‘பிரேமலு’ புகழ் சங்கீத் பிரதாப், சித்திக், சபீதா ஆனந்த், பாபுராஜ், லாலு அலெக்ஸ், எஸ்.பி.சரண் உட்படப் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பவர் ஜஸ்டின் பிரபாகரன்.
சன்மனசுள்ளவர்க்கு சமாதானம், சினேக வீடு, வரவேழ்பு, டி.பி.பாலகோபாலன் எம்.ஏ., பாப்பன் பிரியப்பட்ட பாப்பன் என்று சுமார் 15க்கும் மேற்பட்ட படங்களில் மோகன்லாலோடு இணைந்து தந்திருக்கிறார் சத்யன். அந்த வரிசையில் ‘என்னும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து ‘ஹ்ருதயபூர்வம்’மில் அவருடன் கைகோர்த்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ‘பீல்குட்’ படங்கள் காணும்போதெல்லாம் சத்யன் அந்திக்காடை நினைவுகூர்வது மலையாள ரசிகர்களின் வழக்கம். அந்த வரிசையில் இப்படமும் இணையலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.
‘ஹ்ருதயபூர்வம்’ அதனைப் பூர்த்தி செய்யுமா அல்லது அதனைக் கடந்து நிற்குமா?
இக்கேள்விக்குப் பதில் தெரிவதற்குள், மோகன்லாலின் ’பான் இந்தியா’ படங்களான கண்ணப்பா, விருஷபா ‘அப்டேட்’கள் வரத் தொடங்கிவிடும். ஆண்டிறுதியில் மம்முட்டி, குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, ராஜீவ் மேனன் நடிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கும் படம் வரக்கூடும். Mohanlal Hridayapoorvam Movie First Look
ஆக, இந்த ஆண்டு மோகன்லாலின் காட்டில் ‘பெருமழை’ போல..!