ஹ்ருதயபூர்வம் : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

mohan lal hridayapoorvam movie review august 29
ஹாட்ரிக் அடித்தாரா மோகன்லால்..?!

சில இயக்குனர்களுடன் குறிப்பிட்ட நாயகர்கள் இணையும்போது, அப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பு உயர்ந்து நிற்கும். மலையாளத் திரையுலகைப் பொறுத்தவரை அப்படியொன்றாக விளங்குவது மோகன்லால் ப்ளஸ் சத்யன் அந்திகாடு கூட்டணி. சிறு இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் கைகோர்த்திருக்கிற படம் ‘ஹ்ருதயபூர்வம்’.

மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப், சங்கீதா, லாலு அலெக்ஸ், சித்திக் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே வெளியான ச.அ. மற்றும் லாலேட்டன் படங்கள் பெரும்பாலும் பீல்குட் அனுபவத்தைத் தரக்கூடியவை. அவற்றைப் போலவே இருக்குமா என்ற எண்ணத்தை உருவாக்கியது ‘ஹ்ருதயபூர்வம்’ ட்ரெய்லர். தற்போது இது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

சரி, படம் எப்படி இருக்கிறது?

ADVERTISEMENT
எதிர்பாராத ஒரு அனுபவம்!

கொச்சியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார் சந்தீப் பாலகிருஷ்ணன் (மோகன்லால்). நடுத்தர வயதில் இருக்கும் அவருக்கு இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது. அவருக்குப் புதிதாக பொருத்தப்பட்ட இதயம் ஒரு ராணுவ அதிகாரியினுடையது.

அந்த அதிகாரியின் பெயர் ரவீந்திரன். புனேவைச் சேர்ந்த அவர் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைய, அவரது உடலுறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

சில நாட்களுக்குப் பிறகு, ரவீந்திரனின் மகள் ஹரிதா (மாளவிகா மோகனன்) சந்தீப்பைத் தேடி கேரளா வருகிறார். தனது நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார். அவரது வார்த்தைகளில் தந்தையின் இதயம் மீதான ஆராதனை தெரிகிறது. ஆனால், அந்த விழாவில் பங்கேற்க சந்தீப்புக்கு விருப்பமில்லை. அவரது இயல்பு அப்படிப்பட்டது.

ஆனால், இதய அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு சந்தீப்பின் உதவிக்காக நியமிக்கப்பட்ட ஆண் செவிலியரான ஜெர்ரி (சங்கீத் பிரதாப்) அம்முடிவை எதிர்க்கிறார். ‘நன்றி கெட்ட ஆள்’ என அப்பெண் நினைக்கக்கூடும் என்று சந்தீப்பிடம் சொல்கிறார்.

அதையடுத்து, வேறு வழியில்லாமல் சந்தீப்பும் ஜெர்ரியும் புனே செல்கின்றனர். அவரது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

எதிர்பாராத நிகழ்வு அப்போது தலைதூக்குகிறது. அதனால், சந்தீப்புக்கு உடல்நலமில்லாமல் போகிறது. அதனால், ஹரிதாவின் வீட்டில் சந்தீப்பும் ஜெர்ரியும் தங்க நேரிடுகிறது.

அந்த சம்பவத்திற்குப் பின்னால் மெல்ல ஹரிதாவுக்கும் சந்திப்புக்கும் இடையே நட்பு துளிர் விடுகிறது. ‘பாசம்’ என்று சொல்ல முடியாத ஒரு பிணைப்பு உருவாகிறது.

அதேநேரத்தில், ஹரிதாவின் தாய் தேவிகாவும் (சங்கீதா) சந்தீப்பின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படுகிறார். வார்த்தைகளால் விளக்க முடியாத பிணைப்பாக அது இருப்பதை உணர்கிறார்.

இவ்விரண்டு பேரின் உணர்வுகளையும் ஒரேநேரத்தில் அனுபவிக்க நேர்கிற சந்தீப், பெண் துணை இல்லாமல் இதுவரை வாழ்ந்து வந்தவர்.

அவர் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்? இதய அறுவைச்சிகிச்சையும் அதனைத் தொடர்ந்து நேரிடுகிற புனே பயணமும் அவரது வாழ்வை எந்த வகையில் மாற்றுகின்றன என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

நாயக பாத்திரம் போன்றே இப்படத்தைக் காண நேரும் நாமும் எதிர்பாராத ஒரு அனுபவத்தைச் சந்திக்கிறோம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

இப்படம் ஈர்க்கிறதா?

இந்தப் படத்தில் நடித்த மோகன்லால் முதல் மாளவிகா மோகனன், சங்கீதா, சங்கீத் பிரதாப், சித்திக், லாலு அலெக்ஸ் எனப் பலரும் நேரில் நாம் பார்க்கிற மனிதர்களைப் போலத் திரையில் உலவியிருக்கின்றனர். அந்த ‘லைவ் அனுபவ’த்தைத் தர அவர்கள் நடிப்பில் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டும்? அதனை யோசித்தால், அவர்களது திறமையும் அர்ப்பணிப்பும் நமக்குப் பிடிபடும்.

நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தின் வழியே நமக்குக் காட்சி தந்திருக்கிறார் சபீதா ஆனந்த்.

இன்னும் ஜனார்த்தனன், பாபுராஜ் எனச் சிலர் இதிலுண்டு. பசில் ஜோசப், அல்தாப் சலீம், மீரா ஜாஸ்மினும் இதில் ஒரு காட்சியில் வந்து போயிருக்கின்றனர்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அனு முத்தெடத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை. இவ்விரண்டும் பசுமையாக அமைந்திருக்கின்றன.

மெல்லிய தென்றலை எதிர்கொள்வது மாதிரி இவர்களது உழைப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம். ஆனால், காட்சிகள் துருத்திக்கொண்டு நிற்கவில்லை. அந்த வகையில் கே.ராஜகோபாலின் கத்தரிக்கு வேலை குறைவு.

பொதுவாக, ஒரு மலையாளப் படத்திற்கான ‘பட்ஜெட்’ வரையறைகள், அது தருகிற திரையனுபவத்தைச் ‘சுமாரானதாக’ மாற்றும். இதில் அந்தக் குறை இல்லை.

அதேநேரத்தில் ரொம்பவே கனமான கதையைக் கடந்து வருகிற உணர்வையும் இப்படம் தருவதில்லை.

ஆங்காங்கே லேசாகச் சிரித்து, கண் கலங்கி, காதல் உணர்வைப் பெற்று தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டியிருக்கிறது.

அதற்குக் காரணம் அகில் சத்யனின் கதைக்கு சோனு டி.பி. அமைத்துள்ள திரைக்கதை வசனம். அவ்விரண்டும் வழக்கமான திரையனுபவத்தை நாம் பெறக்கூடாது என மெனக்கெட்டிருக்கின்றன.

குறிப்பாக, மதில் மேல் நடப்பது போலான உள்ளடக்கத்தைக் கவனமாகச் சித்தரித்திருக்கிறது திரைக்கதை. நகைச்சுவையின் துணை கொண்டு, அருவெருப்பின்றி அதனைச் சொல்ல முயன்றிருப்பது பாராட்டுக்குரியது.

அதேநேரத்தில், ஒரு திரைப்படத்திற்கான திரைக்கதை தருகிற ‘ரோலர்கோஸ்டர்’ பயணம் இதில் அறவே இல்லை.

காரசாரமான மீல்ஸ் எதிர்பார்ப்பவர்களுக்கு, அவித்த மீனில் லேசாக உப்பையும் மிளகுத் தூளையும் தூவித் தந்தாற் போலிருக்கிறது ‘ஹ்ருதயபூர்வம்’. அது வேறுவிதமான சுவையைத் தரும் என்பது உண்மை. ஆனால், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அது போதுமா என்பதுவே கேள்வி.

உண்மையைச் சொன்னால், இயக்குனர் சத்யன் அந்திக்காடு படங்கள் தருகிற திரையனுபவம் மலை ரயில் பயணத்திற்கு ஒப்பானவை. ‘ஹ்ருதயபூர்வம்’ அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

ஆனால், இன்றைய காலத்தில் எத்தனை பேரை இப்படம் ஈர்க்கும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதற்குப் பதில் தெரிந்தவர்கள் அல்லது அக்கேள்வியைப் புறந்தள்ளத் தயாராக இருப்பவர்கள் மட்டும் ‘ஹ்ருதயபூர்வம்’ காணலாம், ரசிக்கலாம்..

அந்த வகையில், இந்த ஆண்டில் எம்புரான், துடரும் படங்களுக்குப் பிறகு ஹாட்ரிக் அடித்திருக்கிறார் மோகன்லால். அவ்விரண்டு படங்களுக்கும் இணையாக இது இருக்கிறதா என்று கேட்பவர்களைப் பொறுத்தவரை, இப்படம் நிச்சயம் வெற்றிப்படமல்ல..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share