தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்களை உற்றுநோக்கினால், அவற்றில் பெரும்பாலானவை ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றது தெரியவரும். அதுவும் கூட ‘சில ஷாட்களை, வசனங்களை கட் செய்தால் ஏ சான்றிதழைத் தவிர்க்கலாம்’ என்ற நிலையில், அதனைப் பெற முனைந்தவையாக இருக்கும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் பல நாயகர்களின் படங்கள் அந்த பட்டியலில் சேரும். தமிழ் என்றில்லை, இன்றைய சூழலில் இதர மொழிகளிலும் கூட இதே நிலைமைதான்.
இந்தச் சூழலில்தான், மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஹ்ருதயபூர்வம்’ திரைப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மோகன்லால் இயக்கிய ‘பரோஸ் 3டி’ தவிர்த்து நெரு, மலைக்கோட்டை வாலிபன், எல்2: எம்புரான், துடரும் என அவர் நடித்த அனைத்துமே ’யு/ஏ’ சான்றிதழையே பெற்றன. அவர் கௌரவத் தோற்றத்தில் வந்து போன ‘ஜெயிலர்’, ‘கண்ணப்பா’ படங்களிலும் அதுவே நிகழ்ந்தது.
’வன்முறை தெறிக்கிற சண்டைக்காட்சிகளுடன் ’ஆக்ஷன்’ படமெடுத்து இளைய தலைமுறையின் நாடித்துடிப்பை எகிறச் செய்ய வேண்டும்’ என்று முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு படத்தை உருவாக்குபவர்கள் மெனக்கெடுகிற காலகட்டத்தில், ‘ஹ்ருதயபூர்வம்’ குழுவானது ’ஒரு மெல்லிய பூங்காற்று’ போன்ற திரையனுபவத்தைத் தர முன்வந்திருக்கிறது.
இந்தப் படத்தை சத்யன் அந்திக்காடு இயக்கியிருக்கிறார். ‘மெலோட்ராமா’ வகைமையில் ஆங்காங்கே காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்டை தெளித்து மனதை நெகிழ வைக்கிற வகையில் இவரது படைப்புகள் இருக்கும்.
’அத்யாயம் ஒண்ணு முதல்’ தொடங்கி ‘காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட்’, ’நாடோடிக்காட்டு’, ’வரவேழ்பு’, ‘மழவில்காவடி’, ’ரசதந்திரம்’ எனப் பல படங்களை மோகன்லால், சத்யன் அந்திக்காடு கூட்டணி அவ்வாறு தந்திருக்கிறது.
‘ஹ்ருதயபூர்வம்’ படத்தில் ‘பூவே உனக்காக’ சங்கீதா உடன் மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப், சித்திக், நிஷான், பாபுராஜ், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் எனப் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
இதன் பின்னணி இசை, பைனல் மிக்ஸிங் நிறைவடைந்ததாகத் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதில், ‘இப்படியொரு அழகான படத்தினை இசையமைக்கத் தந்ததற்கு இயக்குனர் சத்யன் அந்திக்காடுவிற்கு நன்றி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
