’எம்புரான்’ சர்ச்சை எப்போது ஓயும்?

Published On:

| By Minnambalam Desk

mohan lal 'Empuraan' controversies clear message

உதயசங்கரன் பாடகலிங்கம்

’லூசிஃபர்’ படத்தின் ரீமேக்கான ‘எல்2: எம்புரான்’ படத்தைச் சுற்றித்தான் எத்தனை சர்ச்சைகள்? வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் ஒருபக்கம் தங்கள் மீது அவதூறை வாரியிறைத்திருப்பதாக எதிர்ப்பைக் கொட்டுகின்றன. இன்னொரு பக்கம் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அபத்தமான கருத்தைச் சொல்லியிருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. mohan lal ‘Empuraan’ controversies clear message

இவற்றைத் தாண்டி தேசியப் புலனாய்வு முகமை, உளவுப் பிரிவு, மத்திய உள்துறை அமைச்சகம், அமலாக்கத் துறையை அவமானப்படுத்தும்விதமான கருத்தாக்கம் என்று அரசு எந்திரத்திற்கு எதிராகப் படம் இருப்பதாகத் தகவல்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இவர்கள் அனைவருமே இந்த படம் திரையிடப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்கின்றனர்.

ஆனால், இந்த சர்ச்சைகள் பூதாகரமாகும் முன்னரே சுமார் 2 நிமிடங்கள் 8 நொடிகள் கொண்ட ஷாட்கள், காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்டு, கடந்த 31ஆம் தேதி முதல் அந்த பதிப்பு திரையிடப்படும் என்று நாயகன் மோகன்லால் ஒரு பதிவை வெளியிட்டார். படத்தைத் தயாரித்த ஆண்டனி பெரும்பாவூர் அவரது நெருங்கிய நண்பர் என்பதும் அதற்கொரு காரணம்.

இதற்கு நடுவே, 200 கோடி ரூபாய் வசூலுடன் வெற்றி வாகை சூடி வருவதாக ‘எம்புரான்’ விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

என்ன இருக்கிறது?

தொடக்கக் காட்சியொன்றில் ‘2002 – இந்தியா’ என்ற பெயரில் முஸ்லிம் மக்கள் சிலர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை காண்பிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக, ஒரு ரயில்நிலையத்தைக் காட்டும் பலகையும், அங்கு நின்று கொண்டிருக்கும் ரயில் ஒன்றில் தீப்பிடிப்பதும், அதில் சிக்கிச் சில சாதுக்கள் தீக்கிரையாக்கவதும் டைட்டில் காட்சியில் வந்து போயின.

இவையிரண்டையும் அடுத்து, அரண்மனையொன்றில் தஞ்சம் புகும் முஸ்லிம் மக்கள் மீது இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்துவதாகக் காட்சியொன்று இருந்தது. அதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவதாகக் காட்டப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலை நிகழ்த்திய கதாபாத்திரத்தின் பெயர் ‘பல்ராஜ் படேல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகான காட்சிகளில், அதே பாத்திரம் ’பாபா பஜ்ரங்கி’ என்று அழைக்கப்படுவதாகக் காட்டப்பட்டிருந்தது.

இங்குதான் சிக்கல் எழுகிறது. இந்த சித்தரிப்பு ஆட்சேபணைக்குரியது என்கின்றன இந்துத்துவ அமைப்புகள்.

குஜராத்திலுள்ள ‘பஜ்ரங் தள்’ அமைப்பின் தலைவர் பாபுபாய் படேல் என்பதும், நரோடா பாடியா கலவர வழக்கில் அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டதும், இப்படத்திலுள்ள சித்தரிப்புடன் பொருந்துவதுதான் பிரச்சனையாகக் கருதுகின்றன இந்த அமைப்புகள்.

இப்படத்திலுள்ள பெரும்பாலான விஷயங்கள் சில உண்மைத் தரவுகளுக்கு நெருக்கமாகவே இருக்கின்றன.

இது போகத் தஞ்சம் புகும் மக்கள் செல்லுமிடத்தின் வழியே ஒரு சிவன் கோயில் இருப்பதை அடையாளப்படுத்தப்படும் ஷாட் இதில் இருந்தது. ஒரு கட்சியின் பெண் தலைவரைக் கைது செய்ய வில்லன் தரப்பு உள்துறை அமைச்சகத்தை நாடுவதாக வசனம் இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, என்.ஐ.ஏ.வை பயன்படுத்தி அந்த பெண் அரசியல்வாதி கைது செய்யப்படும் காட்சி இடம்பெற்றிருந்தது.

மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தும் முற்றிலுமாக நீக்கப்பட்டோ அல்லது சில மாற்றங்கள் செய்யப்பட்டோ தற்போது ’எம்புரான்’ மாற்றியமைக்கப்பட்டு மறுதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேற்சொன்ன விஷயங்கள் எல்லாமே ‘கட்’ செய்யப்பட்டிருக்கின்றன. கலவரக் காட்சியில் பெண்கள் மீது வன்முறை ஏவப்படுவதாக இருந்த அனைத்து ஷாட்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.

இது போக, உளவுத்துறையைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரியிடம் இந்துத்துவ அமைப்பின் தலைவர் ஒருவர் நேரடியாகப் பேசி, கேரள அரசியலை ஆட்டிப் படைக்கும் முடிவுகளை மேற்கொள்ளவிருப்பதாகச் சில காட்சிகள் இருந்தன.

ஊழலில் சிக்கிய இளம் கேரள முதலமைச்சர் தனது கட்சியினருக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வதாகவும், மேற்சொன்ன தலைவரோடு ‘டீல்’ பேசுவதாகவும் காட்சிகள் இருந்தன.

கேரளாவில் இருக்கும் நில வளத்தைக் குறி வைத்து தான் இப்படிப்பட்ட செயல்கள் அரங்கேற்றப்படுவதாகவும் ஒரு வசனம் வந்து போனது.

தற்போதுள்ள திருத்தப்பட்ட ‘எம்புரான்’ பதிப்பில் இவை இருக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால், இப்போதும் இப்படம் தங்களுக்கு எதிராகவே இருப்பதாகப் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன சில அமைப்புகள்.

இது போக, கேரள அரசியலில் காங்கிரஸ் கட்சி உடைந்து பல கட்சிகளாகச் சிதறி நிற்பது, மதச்சார்பின்மை என்ற ஒரு காரணத்தைத் தவிர காங்கிரஸ் உடன் அனுசரித்துப் போக விரும்பாத இடதுசாரிகளின் அரசியல் பார்வை என்று சில விஷயங்கள் இதிலுண்டு.

அவற்றில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பது அரசியல் பார்வையாளர்களுக்குத் தெரியும்.

இந்த சர்ச்சைகளை மீறி, தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் விதமாக ‘ஒரு அணைப் பிரச்சனை’யும் இதில் பேசப்படுகிறது.

நெடும்பள்ளியில் இருக்கும் ஒரு அணை தொடர்பாக 999 ஆண்டுகால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி அகன்றபிறகும் அந்த ஒப்பந்தம் அப்படியே இருப்பதாகவும், அந்த அணை உடைந்தால் கேரள மக்களின் வாழ்வே கேள்விக்குறியாகிவிடும் என்றும் இதில் ஒரு வசனம் இருந்தது.

அந்த அணையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு கண்காணிப்பு அரண் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில் தென்கொரிய நாட்டு நிறுவனங்களிடம் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றதாகவும் சில கதாபாத்திரங்கள் வசனம் பேசியிருந்தன.

மேற்சொன்ன விஷயங்கள் முல்லைப் பெரியாறு அணை சம்பந்தப்பட்டது என்று முதல் பார்வையிலேயே புரிந்துவிடும். ஆனால், இவ்வசனங்கள் படத்தில் சட்டென்று நொடியில் கடந்துவிடும். தற்போதைய சர்ச்சைகளால் இவை திரும்பத் திரும்பப் பார்க்கப்படுகின்றன.

இது போக பிருத்விராஜ் ஏற்று நடித்த சையத் மசூத் பாத்திரத்தின் பெயரை டீகோடிங் செய்வது உட்படச் சில தகவல்கள் சமூகவலைதளங்களில் உலவுகின்றன.

எம்புரான் படக்குழுவால் கட் செய்யப்பட்ட இரண்டு நிமிடக் காட்சிகளில் முல்லைப் பெரியாறு குறித்த வசனங்கள் இடம்பெறவில்லை என்பது மட்டும் இதுவரை வெளியான செய்திகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அது இன்னும் சில காலம் செய்திகளுக்குத் தீனி போடும்.

ஏன் இந்த நிலைமை?

‘எம்புரான்’ விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே கேரள பாஜக அமைதி காப்பதாகச் சொல்லப்படுகிறது. திருச்சூரைச் சேர்ந்த ஒரு பாஜக நிர்வாகி கேரள உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்ய, நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. மிகச்சில மணி நேரங்களில் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்.

மார்ச் 27 அன்று இப்படம் வெளியானது என்றால், அதற்கடுத்த மூன்று நாட்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, மறுதணிக்கை செய்யப்பட்டு, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அப்பதிப்பு திரையிடப்படுவதாகச் செய்திகள் வந்தன.

தமிழக சட்டமன்றத்தில் எம்புரான் படம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, ”எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியான பிறகு எழுந்த எதிர்ப்பால் தற்போது அந்தக் காட்சி நீக்கப்பட்டு தமிழகத்தில் திரையிடப்படுகிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இது பற்றி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘மறு தணிக்கை செய்ய வேண்டுமென்ற முடிவு படக்குழுவினர் அவர்களாகவே மேற்கொண்டது’ என்று பதிலளித்தார் மத்திய இணையமைச்சராக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபி.

படத்தின் டைட்டிலில் நன்றி தெரிவிக்குமிடத்தில் இருந்த தனது பெயர் கூடத் தான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தற்போது நீக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தார்.

அது மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்பி ஜான் பிரிட்டாஸிடம் அவர் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.

’எம்புரான் படத்தின் மறுதணிக்கையை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் ’டிபி 51’ எனும் மலையாளப் படத்தை வெளியிடத் தயாரா’ என்று கேட்டிருந்தார். கூடவே, ‘லெப்ட் ரைட் லெப்ட்’ படம் பற்றியும் பேசியிருந்தார் சுரேஷ் கோபி.

‘டிபி 51’ என்பது 2012 மே மாதம் கோழிக்கோடு நகரில் படுகொலை செய்யப்பட்ட இடதுசாரி கட்சித் தொண்டரான டி.பி.சந்திரசேகரனைப் பற்றியது. அவரது சடலத்தில் இருந்த 51 காயங்களை வைத்து படத்தின் டைட்டில் வைக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு முதல் வெளியீடு வரை பல பிரச்சனைகளைச் சந்தித்தார் அதன் இயக்குனர் மொய்து தாழத்.

அப்படம் தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயனைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் கூறி, அப்போது எதிர்ப்பு வலுத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படமும் திரையிடப்படவில்லை. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்த மொய்து அதனை விட்டு விலகியிருக்கிறார். இப்போது வரை அவர் திரைப்படப் பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலையாளத் திரையுலகில் ’கல்ட் பிலிம்’ ஆக கருதப்படும் படங்களில் ஒன்றான ‘லெப்ட் ரைட் லெப்ட்’டும், அது வெளியான காலகட்டத்தில் சர்ச்சைகளைச் சந்தித்ததாகக் கூறியிருந்தார் சுரேஷ் கோபி.

இந்த படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதியவரும் முரளி கோபிதான்.

இப்படத்தில் வில்லனாகச் சித்தரிக்கப்பட்ட ’கைதேறி சகாதேவன்’ பாத்திரம் தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயனை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாகப் பேச்சு எழுந்தது. படம் பெரிதாகக் கவனிக்கப்படாத காரணத்தால் அப்பேச்சும் அமிழ்ந்து போனது.

முரளி கோபி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். இதுவரை ரசிகன், ஈ அடுத்த காலத்து, லெப்ட் ரைட் லெப்ட், தியான், கம்மார சம்பவம், லூசிஃபர், தீர்ப்பு, எம்புரான் ஆகிய 8 படங்களுக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் கேரளத்தில் உள்ள சமகால அரசியல் கட்சிகளை, அவற்றின் சித்தாந்தத்தை, அவை சார்ந்த தலைவர்களை, சமூகத்தில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றங்களை விமர்சிக்கும் வகையிலேயே உள்ளன.

மேற்சொன்னவற்றில் ரசிகன், தீர்ப்பு தவிர்த்த மற்ற படங்களை ரசித்தவன் என்ற முறையில், முரளி கோபியின் தி பெஸ்ட்’ என்று ‘லெப்ட் ரைட் லெப்ட்’ படத்தைச் சொல்லலாம்.

அப்படத்தைக் காணும் எவரும், அதிலிருக்கும் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, அதன் அபாரமான திரைமொழியை ரசிப்பது உறுதி. அப்படம் தந்த திரையனுபவத்தில் பத்தில் ஒரு பங்கு கூட எம்புரானில் இல்லை.

அனைத்தையும் தாண்டி, திரைக்கு வந்தபிறகு ஒரு படைப்பின் மீது கொட்டப்படும் எதிர்ப்புகள் அதற்கான விளம்பரங்களாகவே மாறும். மிகச்சில நேரங்களில் மட்டுமே அதன் அதல பாதாள வீழ்ச்சிக்குக் காரணமாகும்.

ஒரு திரைப்படம் தணிக்கைத் துறையில் உள்ளவர்களால் உரிய காரணங்கள் இன்றி நிராகரிக்கப்படுவதைக் காட்டிலும் மோசமானது, தணிக்கை செய்யப்பட்டு திரையிடப்பட்ட படத்தின் உள்ளடக்கத்தை நீக்கச் சொல்வது அல்லது அப்படைப்பை தடை செய்யுமாறு கோருவது.

இந்த சர்ச்சை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

‘லெப்ட் ரைட் லெப்ட்’ திரைப்படம் எனக்குப் பிடித்துப் போனதற்கு அதன் டைட்டிலும் ஒரு காரணம். எந்தவொரு அணிவகுப்பு மரியாதையிலும், அதில் பங்கேற்பவர்கள் நடக்கையில் இந்த சத்தத்தைக் கேட்கலாம். தொடர்ந்து பயணிக்க வலது, இடது என்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நகர வேண்டும் என்பதே அதன் அடிப்படை.

சிறு குழந்தைகள் போல ‘பாண்டியாட்டம்’ ஆட வேண்டுமானால் ஒரு பாதத்தை மட்டும் ஊன்றி தவ்வலாம். இந்த சர்ச்சையும் அப்படிச் சட்டென்று முடிவுக்கு வந்தால் நல்லது.

‘எம்புரான்’ சர்ச்சையானது டாரண்ட் தளங்களில், யூடியூப் உள்ளிட்ட காணொலி தளங்களில் ‘லெப்ட் ரைட் லெப்ட்’ திரைப்படம் குறித்த தேடலுக்கு வழி வகுத்திருக்கிறது. ஒரு கோட்டைச் சிறிதாக்க அதனருகே வரையப்பட்ட பெரிய கோடாகவும் இதனை நோக்க நேரிடலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share