குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த 2௦22-ம் ஆண்டு உருவான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆண்டிலேயே கோப்பை வென்று, சக அணிகளுக்கு ஷாக் அளித்தது.
2௦23-ம் ஆண்டிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்னை அணியிடம் தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்தது. இறுதிவரை போராடக்கூடிய அணி என ரசிகர்களும் புகழும் அளவிற்கு இருந்த குஜராத் மீது யார் கண்பட்டதோ? தெரியவில்லை.
தற்போது அந்த அணிக்கு அடிமேல் அடியாக விழுந்து கொண்டுள்ளது. சமீபத்தில் தங்களுடைய வெற்றிகரமான கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, மும்பை அணிக்கு அளித்த கையோடு சுப்மன் கில்லை கேப்டன் ஆக்கியது.
ஆனால் அவர் சமீபமாக நடந்த எந்தவொரு போட்டியிலும் ஜொலிக்கவில்லை. கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரும் கிண்டலடிக்கும் அளவிற்குத் தான் அவரின் ஆட்டம் இருக்கிறது.
இந்தநிலையில் அடுத்த அடியாக குஜராத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முஹம்மது ஷமி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் முடிந்ததில் இருந்து முழங்கால் காயத்தால் எந்தவொரு போட்டியிலும் அவர் இடம்பெறவில்லை. என்றாலும் கண்டிப்பாக ஷமி ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் காயத்திற்கு லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதால், தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் விலகி இருக்கிறார். மேலும் ஒரு அதிர்ச்சியாக டி2௦ உலகக்கோப்பை தொடரிலும் ஷமி இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது.
ஷமிக்கு பதிலாக அந்த அணி யாரை எடுக்கப்போகிறது? என்பது தெரியவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் மா.செ.க்கள் கூட்டம்- காரணம் என்ன?