மோடியின் எச்சரிக்கை வீண்! தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள் – இறக்குமதி கிடுகிடு உயர்வு!

Published On:

| By Mathi

Modi’s Warning Ignored: Gold Imports Surge as Demand Soars

இந்தியாவின் தங்கம் (Gold) இறக்குமதி மே மாதத்தில் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 34% அதிகரித்து, 3.41 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் வெள்ளி இறக்குமதி சுமார் 86.65% வீழ்ச்சியடைந்து 75.57 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 10-ந் தேதி தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இதர இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. தங்கம் இறக்குமதிக்காக அதிகப்படியான அந்நியச் செலாவணி வெளியேறுவது இந்திய ரூபாயின் மதிப்பைப் பாதிக்கும். திருமணங்கள் அல்லது சுப நிகழ்ச்சிகள் என எதுவாக இருந்தாலும், அடுத்த ஓராண்டு காலத்திற்குத் புதிய தங்க ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பது, வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது, மற்றும் தங்கத்தைக் குறைவாக வாங்குவது போன்ற நடவடிக்கைகளை மக்கள் மேற்கொண்டால் மட்டுமே, இந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவை நம்மால் பாதுகாக்க முடியும்” என்றார்

ADVERTISEMENT

மோடியின் ‘தங்கம்’ எச்சரிக்கை வீண் (GOLD)

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்காமல் பொதுமக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.

இதனால் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களை மட்டும் கணக்கிட்டால், தங்கம் இறக்குமதி 60.14% உயர்ந்து 9.04 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுக்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே 13-ந் தேதி முதல் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய உயர்வாகும்.

ஆனாலும் தங்க இறக்குமதி மதிப்பு அதிகரித்ததன் விளைவாக, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மே மாதத்தில் 28.21 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது.

ADVERTISEMENT

புதிய வரி உயர்வுக்குப் பிறகு, டெல்லியில் வரி உட்பட தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் ₹1,60,000-ஆக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலையேற்றத்தினால் தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடுகள் மீது தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

வரி உயர்வினால் தங்கம் மீதான முதலீட்டுத் தேவை குறையக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து இந்தியாவின் மிகப்பெரிய தங்க இறக்குமதி ஆதாரமாகத் தொடர்ந்து நீடிக்கிறது, இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. தங்கம் இறக்குமதி வரியில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்கள், முறையான வர்த்தக வழிகளைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வமற்ற அல்லது கடத்தல் முறையிலான இறக்குமதியை ஊக்குவிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share