‘மோடியின் வெறுப்பு பேச்சு பிளவுகளை ஏற்படுத்தும்’ – மன்மோகன்சிங் தாக்கு!

Published On:

| By indhu

'Modi's speeches will be divisive' - Manmohan Singh

தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுகள் மக்களிடையே பிளவுகளைதான் ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (மே 30) தெரிவித்துள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பஞ்சாப்பில் நடைபெற உள்ளது. இதுத்தொடர்பாக, தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் 3 பக்கங்கள் கொண்ட கடிதத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று (மே 30) வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மன்மோகன் சிங் வெளியிட்ட அந்த கடிதத்தில், “இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் உரையாடல்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் மிக மோசமான வெறுப்புப் பேச்சுகளில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.

சொற்பொழிவின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் பதவியின் ஈர்ப்பையும் குறைத்த முதல் பிரதமர் மோடி. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சிகளையோ குறிவைக்கும் வகையில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய, கண்ணியமற்ற, முரட்டுத்தனமான வார்த்தைகளை இதற்கு முன் எந்தவொரு பிரதமரும் கூறியது இல்லை.

ADVERTISEMENT

என்னைப் பற்றியும் சில பொய்களை அவர் கூறியிருக்கிறார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தை தனித்து பார்த்ததில்லை. பாஜக மட்டுமே அப்படி பார்க்கக்கூடிய கட்சி.

கடந்த பத்து ஆண்டுகளில் பஞ்சாபையும், பஞ்சாபியர்களையும் பழிவாங்குவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் பாஜக அரசாங்கம் விட்டு வைக்கவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது, டெல்லி எல்லைகளில் இடைவிடாமல் காக்கவைக்கப்பட்டதால் பஞ்சாபைச் சேர்ந்த 750 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தனர்.

ADVERTISEMENT

அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட லத்திகளும் ரப்பர் தோட்டாக்களும் போதாது என்பது போல, நாடாளுமன்றத்திலும் அவர்களை பிரதமர் மோடி மிக மோசமாக தாக்கிப் பேசினார்.

தங்களைக் கலந்தாலோசிக்காமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையைத்தான் அவர்கள் முன்வைத்தார்கள். விவசாயிகளின் வருமானத்தை பறிக்கும் சட்டங்கள் அவை.

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொந்தளிப்புடன் உள்ளது. பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி, கோவிட் தொற்றின் போது அமலில் இருந்த வலிமிகுந்த தவறான நிர்வாகம் ஆகியவை பரிதாபகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன.

இதற்கு முன் இல்லாத அளவுக்கான வேலையின்மை, கட்டுப்பாடற்ற பணவீக்கம் ஆகியவை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமத்துவமின்மையை அதிகரித்திருக்கிறது. பாஜக அரசின் தவறான ஆட்சியால் குடும்ப சேமிப்புகள் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டன. 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பாஜக அரசு நமது படைகள் மீது தவறான அக்னி வீரர் திட்டத்தை திணித்துள்ளது. தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு 4 ஆண்டுகள் மட்டுமே என்று பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது. வழக்கமான ஆட்சேர்ப்புக்கு பயிற்சி பெற்றவர்கள், வெளியேறும் ஆட்சியால் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படை மூலம் தாய்நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கனவு காணும் ஒரு இளைஞர், 4 வருடங்களுக்கு மட்டுமேயான பணி என்பதால் அதில் சேர்வது குறித்து ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.

அக்னிவீரர் திட்டம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே அக்னிவீரர் திட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி

திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share