வெயிலை விட மோடியின் கொள்கை தான் மக்களை சுட்டெரித்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (மே 2) விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்தும், தேர்தல் அறிக்கை சம்பந்தமான குற்றச்சாட்டுகள் குறித்தும் பதில் அளித்து இருந்தார். மேலும், இந்த கருத்துகளை மக்களிடம் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் எடுத்து செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
பிரதமர் மோடியின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (மே 2) பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு பற்றி எங்களுடன் நேரடியாக விவாதிக்க பிரதமரே நீங்கள் தயாரா? காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள். தேர்தலில் வாக்கினை பெறுவதற்காக பொய்களுடன், பிரிவினைவாதம் பேசும் பிரதமராக மட்டுமே மக்கள் உங்களை நினைவுகூர்வார்கள்.
தைவான் பள்ளத்தாக்கில் 20 இந்தியர்கள் உயிர்த்தியாகம் செய்தபோதும் சீனா என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தவில்லை. இதன் மூலமாக சீனாவை தப்பிக்க வைத்துள்ளீர்கள். தற்போது உத்தரகாண்ட், லடாக், அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவத்தினர் தடவாளங்களை கட்டி வருகிறார்கள்.
சீனப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்தது தான் சீனா மீது எடுக்கும் நடவடிக்கையா? இதுதான் உங்களது தேசபற்றா?” என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து, “மக்கள்தொகை அடிப்படையில் ஓபிசி, எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக எதிர்ப்பது ஏன்? மேடைகளில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் மோடி பேசி வருகிறீர்கள். வெயிலை விட பாஜகவின் கொள்கைகள்தான் மக்களை சுட்டெரித்து வருகிறது. 1947 முதல் இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தான்” என மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மறைந்தாலும் மறக்க முடியாத உமா ரமணனின் பாடல்கள்!
விருதுநகர் வெடி விபத்து.. நடந்தது என்ன? : விஏஓ அதிர்ச்சி தகவல்!