மணிப்பூர் மாநிலத்துக்கு நாளை செல்லும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மோடியின் வருகைக்கு எதிராக மணிப்பூர் மாநில பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடிக்கிறது. மணிப்பூரில் இன்னமும் அமைதி திரும்பவில்லை; அரசியல் குழப்பம் உச்சகட்டத்தில் இருக்கிறது. இதுநாள் வரை மவுனமாக இருந்த பிரதமர் மோடி திடீரென மணிப்பூர் செல்வதால் அம்மாநிலத்தில் கொந்தளிப்பும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
பிரதமர் மோடி வருகைக்கு எதிராக பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.
‘Go Back Modi’ முழக்கம்
“The Working Group of Meira Paibi”-ன் பொதுச் செயலாளர் Apabi Leima கூறியதாவது: மணிப்பூரில் வன்முறைகள் தொடங்கி 2 ஆண்டுகள் 4 மாதங்களாகிவிட்டன. பிரதமர் மோடி கனத்த மவுனம் மட்டுமே காத்து வந்தார். மணிப்பூர் மாநிலத்தின் வன்முறைகளுக்கு முடிவு கட்ட பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. அதனால் பிரதமர் மோடியை மணிப்பூர் மக்களாகிய நாங்கள் வரவேற்க மாட்டோம். மணிப்பூர் வரும் மோடிக்கு எதிராக “Go Back Modi” முழக்கத்தை முன்வைக்கிறோம்.
மணிப்பூர் மக்களுக்கு இந்தியாவில் இருந்து பிரிந்து சென்று தனிநாடு உருவாக்கக் கூடிய சுய நிர்ணய உரிமை உண்டு. மோடியின் மணிப்பூர் வருகைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு Apabi Leima கூறினார்.
பாஜக நிர்வாகிகள் ராஜினாமா
பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் வருகைக்கு பாஜகவினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மோடியின் வருகையைக் கண்டித்து பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு அக்கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். பாஜகவின் பூத் தலைவர்கள் தொடங்கி மாநில பாஜக நிர்வாகிகள் வரை பலரும் கொத்து கொத்தாக ராஜினாமா செய்வதாக அறிவித்து வருகின்றனர்
