தமிழக மக்களுக்கான பிரதமர் மோடியின் உத்தரவாதங்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Modi

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில்,
கோவையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகையில், ” இந்தியாவின் வளர்ச்சிக்கான முக்கிய எஞ்சினாக தமிழ்நாட்டை நான் பார்க்கிறேன். கடந்த 11 ஆண்டுகளாக 14 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

இது நிதிப் பகிர்வாகவும், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே துறை மற்றும் நலத்திட்டங்களாகவும் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசும் திமுகவும் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்ட நிதியை விட இந்தத் தொகை பல மடங்கு அதிகம்.

ADVERTISEMENT

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் இரண்டு விஷயங்கள் சாதனை அளவுகளை எட்டியுள்ளன. முதலாவது — ஒரு குடும்பத்தின் சொத்து. இரண்டாவது — தமிழ்நாட்டின் கடன். தமிழ்நாட்டின் உச்சபட்சக் குடும்பம் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மகன் மீதும் இருக்கும் கடனோ மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

திமுகவின் கொள்கை என்ன?

“குடும்பத்திற்கு, குடும்பத்தால், குடும்பத்திற்காக” — அவ்வளவுதான் திமுகவின் கொள்கை. முதலமைச்சர் அதே குடும்பம், துணை முதலமைச்சர் அதே குடும்பம், டெல்லியில் இருக்கும் முக்கிய எம்பிக்களும் அதே குடும்பம். திரைப்படங்கள், ஊடக நிறுவனங்கள் எனப் பல துறைகளை ஒரே குடும்பம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், திமுகவின் மூத்த தலைவர்கள் கூட ஒரு குடும்பத்தின் மிக இளைய உறுப்பினர்களிடம் தலை தாழ்த்தி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ADVERTISEMENT

எப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்க நேர்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறுகிறார்கள்: இங்கே ஒரு குடும்பத்திற்குள் பெரும் போட்டா போட்டி நடைபெறுகிறது. இது மகனுக்கும் மருமகனுக்கும் இடையிலான போட்டி.. யார் அதிகமாகக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதான் போட்டி.

ஆளுகையில் தொலைநோக்குதான் இன்று தமிழ்நாட்டிற்கு அத்தியாவசியத் தேவை, மகன்-மருமகன் அடிக்கும் கொள்ளையல்ல. அதேபோல திமுகவிற்கும் டெல்லியில் அவர்களது கூட்டாளிகளுக்கும் இடையே ஒரே ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு கட்சிகளிலும் மருமகன்கள் அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தியா ஒரு மகனாலும் ஒரு மருமகனாலும் சலித்துப் போய்விட்டது. அதேபோல் தமிழ்நாடும் ஒரு மகனாலும் ஒரு மருமகனாலும் சலித்துப் போய்விட்டது. இந்த இரண்டு குடும்பங்களின் ஊழலால் மக்கள் பெரும் வேதனையில் இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால் திமுகவிற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். கோயம்புத்தூரில் மண்ணின் மைந்தர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோமே. அரசியல் கட்சிகளின் பின்புலம் எதுவும் இல்லாதவர். நேர்மை மற்றும் கடுமையான உழைப்பால் உயர்ந்தவர். தென்னை நார் வாரியத்தில் இருந்தபோது ஏற்றுமதியை சாதனை அளவுகளுக்கு கொண்டு சென்றார். இப்போது கோயம்புத்தூரில் மண்ணின் மைந்தர் ஒருவர் நமது துணை குடியரசுத் தலைவராக இருக்கிறார்.

திமுகவின் ஊழல் மலிந்த ரவுடி அரசியலை கோயம்புத்தூர் மக்கள் எப்போதுமே புறக்கணித்து வந்திருக்கிறார்கள். ஆகையால்தான் இந்தப் பகுதியை ஒரு அரசியல் பலி வாங்கும் நோக்கத்துடன்தான் திமுக அணுகி வந்திருக்கிறது. திமுகவின் உச்சபட்சக் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் கோவை மக்களை சில மாதங்களுக்கு முன்பு எப்படி அவமானப்படுத்தினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

டாஸ்மாக் ஊழல் போன்ற பெரிய மோசடிகளுக்கு பெயர் போன ஒரு அரசியல்வாதியை இப்போது இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இதுபோன்ற பல முக்கியமான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகள், வீடுகள், குடிநீர் இணைப்புகள், எரிவாயு இணைப்புகள், முத்ரா கடன்கள். இவை அனைத்தும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

வரியே இல்லை

கடந்த பத்தாண்டுகளில் நாம் 25 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டெடுத்துள்ளோம். இது பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். இந்த 25 கோடி மக்கள் முன்னேறத் துடிக்கும் ஆர்வமுடையவர்கள். அவர்கள் சரக்குகளையும் சேவைகளையும் பெற செலவு செய்கிறார்கள். யார் இந்த சரக்குகளைத் தயாரிக்கிறார்கள்? கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருக்கும் சிறிய தொழிற்சாலைகள்தான். யார் விற்பனை செய்கிறார்கள்? நடுத்தர வர்க்கத்தினர் நடத்தும் உள்ளூர் வியாபாரிகளும் கடைகளும்தான்.

யார் அங்கே வேலை பார்க்கிறார்கள்? நடுத்தர வர்க்க இளைஞர்கள்தான்.மத்திய அரசின் நலத்திட்டங்கள் தாமதமின்றி அமல் செய்யப்படும்போது ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் பலன் அடைகிறார்கள். வளர்ச்சி அனைவரையும் சென்றடைகிறது. இதனால்தான் தமிழ்நாட்டிற்கு டபுள் எஞ்சின்.. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேவை.

உங்கள் சேமிப்பு குறித்து நாங்கள் அக்கறை எடுத்துக் கொள்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு 12 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு 2 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டியிருந்தது. இன்று 12 லட்சம் ரூபாய் வரை வரியே இல்லை. இது மக்களின் கைகளில் நேரடியான சேமிப்பு. ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைத்து அடுத்த கட்ட நிவாரணத்தையும் நாங்கள் அளித்துள்ளோம். இதனால் சரக்குகளையும் சேவைகளையும் மக்கள் குறைவாக செலவு செய்து வாங்குகிறார்கள். நடுத்தர மக்களுக்கு இது எத்தனை ஆதாயம்!

கல்வி, ஆரோக்கியம், வீட்டு வசதி ஆகியவை தொடர்பாக குடும்பங்கள் இனி அதிகம் சேமிக்க முடியும். அதிக முதலீடு செய்து அதிலிருந்து அதிக வருமானம் ஈட்ட முடியும். அதேபோல சரக்குகள், சேவைகள் தொடர்பாக அதிகம் செலவும் செய்ய முடியும். தேவை அதிகரிக்கும்போது தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கும். இது சிறிய வியாபாரங்கள் மற்றும் உள்ளூர் சந்தைக்கு ஆதரவாக இருக்கிறது. சேமிப்பு காரணமாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இந்தியாவில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ஆதாயம் ஏற்படும். பொருளாதாரம் வலுப்பெறும். இது தமிழ்நாட்டிற்குப் பெரும் பலனைத் தரும்.

குறைவான செலவில் உயர்தர மருத்துவ சேவை

நாட்டில் மருத்துவத் துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை ஏழை மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இது இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டு, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப்பு மூத்த குடிமக்களுக்கும் அளிக்கப்படுகிறது. நடுத்தரத் தட்டு மக்களுக்கு மூத்தவர்களின் உடல்நலப் பராமரிப்பு பெரும் கவலையாக இருக்கும். அதற்கும் நாம் தீர்வு அளித்துள்ளோம்.உங்கள் ஆரோக்கியம், உங்கள் முதியோர் உடல்நலம், குழந்தைகளின் ஆரோக்கியம் ஆகியவற்றின் மீது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அக்கறை கொள்கிறது. மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் 80 சதவீதம் விலை மலிவாக உள்ளன. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பமும் சுமார் 12,000 ரூபாயைச் சேமிப்பதாக சில மதிப்பீடுகள் கூறுகின்றன.சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்ய பிரதமர் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருதய ஸ்டண்டுகள், மூட்டு உள் வைப்புகள் ஆகியவற்றின் விலைகளுக்கு உச்ச வரம்பை நிர்ணயம் செய்தோம். இதனால் மக்களின் லட்சக்கணக்கான ரூபாய் மிச்சமாகிறது. உடல் நலக் காப்பீடு மீதான ஜிஎஸ்டியை நாம் அகற்றிவிட்டோம். இலவச சிகிச்சை முதல் விலை மலிவான மருந்துகள் வரை, இருதய ஸ்டண்டுகள் முதல் சிறுநீரக டயாலிசிஸ் வரை — மூத்த குடிமக்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலனில் அக்கறை எடுத்து செயல்படுத்தியுள்ளோம். குறைவான செலவில் உயர்தர மருத்துவ சேவை — இதுவே எங்கள் குறிக்கோள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான் கோவைக்கு இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க வந்தேன். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கோவை தமிழ்நாட்டின் கடினமாக உழைக்கும் விவசாயிகள் தங்கள் புதுமைகளை காட்சிப்படுத்தினார்கள். நமது விவசாயிகளுக்கு நான் தலை வணங்குகிறேன். அரசு தமிழர்களின் வாழ்வை மேம்படுத்தும் என்று நான் உறுதி அளிக்கிறேன். திமுக அரசு விவசாயிகளைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் டபுள் எஞ்சின் அரசு விவசாயிகளின் நலன்களுக்கு முதன்மை அளித்து செயல்படும்.

தமிழக மக்களுக்கான உத்தரவாதங்கள்

என் கோவை மண்ணிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு சில உத்தரவாதங்களை நான் அளிக்க விரும்புகிறேன். கோவை மக்களை உங்கள் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்: என்டிஏ ஆட்சிக்கு வந்த உடனேயே நாங்கள் சட்டம் ஒழுங்கைச் சீர் செய்வோம்.

நில அபகரிப்பு குற்றவாளிகள், மணல் அள்ளும் குற்றவாளிகள், மதுபான குற்றவாளிகள் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் என்ற தீமை இல்லாத தமிழ்நாட்டை நாங்கள் உருவாக்குவோம். இது ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பாதுகாக்கும். திமுகவின் இடமாற்றத்திற்காகப் பணம் பெறுதல், பண மோசடி, ஊழல் ஆகியவற்றிற்கு நாங்கள் முடிவு கட்டுவோம். திமுக செய்திருக்கும் அனைத்து மோசடிகளையும் புலனாய்வு செய்து கடும் நடவடிக்கை எடுப்போம். மேலும், இங்கு அனைத்து நியமனங்களும் ஒளிவு மறைவற்ற முறையில் நடைபெறும். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.” என்றார்.

மேலும், “இந்த தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றியது என்று வாக்காளர்களிடம் பாஜகவினர் உரக்கச் சொல்லி ஏப்ரல் 23ஆம் தேதி அன்று ஒவ்வொரு பூத்திலும் வரலாறு காணாத வாக்களிப்பு நடப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். வளர்ச்சி அடைந்த பாரதத்தை படைப்போம்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share