பீகார் சட்டப்பேரவை தேர்தலின் பிரசாரத்தில், தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் (Modi’s Bihar Campaign Insults Tamils) பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி பேசியது என்ன?
பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மோடி, தமிழகத்தில் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்டவையும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாளுவது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்களை இழிவாகக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது.
தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள். அவர்களை குறைத்து பேசுவது, தமிழ் மக்களின் மனதை மட்டும் அல்லாது, இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையிலேயே, தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக தமது கருத்துகளை திரும்பப்பெற்று, தமிழர்களிடம் தனது பேச்சுக் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பிரிவினை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
மாநிலங்களின் ஒற்றுமையையும், இனங்களிடையேயான நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பிரதமர் பேசவேண்டும்.
தமிழர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்தவித செயலும், எந்தவித கருத்தும் கடுமையாகக் கண்டிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு: கடந்த மே 2024 ல் ஒரிசாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய தலைமை அமைச்சர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர்,“பூரி ஜெகநாதர் கோவில் சாவி திருடு போயிருக்கிறது. அது தமிழ்நாட்டில் இருக்கிறது” என தமிழர்கள் மீது திருட்டு பட்டத்தை சுமத்தினார்கள். கேவலம் ஓட்டுக்காக தமிழினத்தின் மீது இப்படியான அவதூறை கூச்சமில்லாமல் சுமத்தினார்கள்.
இப்போது பீகார் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் மோடி, “தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றர்” என
ரவுடி முத்திரையும் குத்தியுள்ளார். ஓட்டுக்காக அற்பத்தனமான அரசியலை மோடி தலைமையிலான பாஜக கும்பல் செய்து வருவது அயோக்கியத்தனமாகும்.
தமிழ்நாட்டில் எந்த பீகாரியாவது தாக்கப்பட்ட சம்பவம் நடந்ததா என
ஒரு சான்று காட்ட முடியுமா? அல்லது பீகாரிகள் யாராவது அப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்களா? அப்படி எதுவுமே நடக்கவில்லை.
இந்தியாவின் மிக உயர்ந்த பதவியிலிருக்கும் மோடி போன்றோர் இப்படி உண்மைக்கு மாறாக பேசி ஏமாற்றுவது அழகா?
முஸ்லீம் வெறுப்பை தொடர்ந்து இப்போது தமிழினத்தின் மீதான வெறுப்பை கட்டமைப்பதை தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். பொய்யும் புரட்டுமாய் பிதற்றித்திரியும் மோடி
‘பிரதமர’ பதவியில் தொடருவது ஒவ்வொரு குடிமகனுக்கும் தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் அவமானம்
பாஜகவும் மோடியும் என்பதை மக்கள் இப்போதே சொல்லத்தொடங்கி விட்டனர்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்: பீஹார் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் பீஹாரிகள் தாக்கப் படுவதாக பிரதமர் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது அனைவருக்கும் தெரியும். இனப்பகைமையை உருவாக்கும் இந்தப் பேச்சுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் பிரதமர் பீஹார் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பிலும், திங்கிற சோற்றிலும் மண் அள்ளி போடுகிறார் என்பதை அந்த தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
