RSS-ஐ நாடிச் சென்ற மோடி… BJP புதிய தலைவர் யார்?

Published On:

| By Aara

பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக அதாவது 11 வருடங்கள் கழித்து, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு நேற்று (மார்ச் 30) சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. Modi visit RSS Headquarters

மோடியின் இந்த நாக்பூர் விசிட் சமீப காலங்களாகவே பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இருந்த பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்றும்…  வருகிற ஏப்ரல் மாதம் பெங்களூருவில் நடக்கிற பாஜக தேசிய செயற்குழுவில் அக்கட்சியின்  புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நிலையில், மோடியின் இந்த விசிட் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. Modi visit RSS Headquarters

11  வருடங்களுக்குப் பின் நாக்பூர் சென்ற மோடி

அடல் பிஹாரி வாஜ்பாய் 1999-2004  காலகட்டத்தில் பிரதமராக இருந்தபோது, தான் பிரதமரான அடுத்த ஆண்டே அதாவது 2000 ஆம் ஆண்டில்  ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் 1972 இல்  இருந்தே ஆர்.எஸ்.எஸ், அமைப்பில் இருப்பவர் மோடி, 2014 ஆம் ஆண்டு  பிரதமராக பொறுப்பேற்றார்.

பிரதமர் ஆன பிறகு அவர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2014, 2019 என இரு முறை பிரதமராக  பத்து ஆண்டுகள் பணியாற்றிய போதும்  ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு மோடி செல்லவில்லை.

 பாஜகவின் தத்துவத் தாய் ஆர்.எஸ்.எஸ்.தான். ஆனால் மோடி பிரதமரான பிறகு பாஜகவில் மோடி பிராண்ட் என்பது உருவாக்கப்பட்டது. முற்றுமுழுதாக மோடியே முன்னிறுத்தப்பட்டார்.

இதன் உச்சமாக 2024 தேர்தலுக்கு முன்பாக, ‘மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார். பாஜக 400 இடங்களில் வெல்லும்’ என்று அமித் ஷா உள்ளிட்டோர் தொடர்ந்துகூறி வந்தனர்.

நட்டா போட்ட போடு!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தேசிய தலைவர் நட்டா  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு ஒரு பேட்டியளித்தார்.  அதில் ஆர்.எஸ்.எஸ். பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில் சர்ச்சையானது, Modi visit RSS Headquarters

“ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இரண்டும் தங்கள் திறமைகளுக்கு ஏற்றவாறு தங்கள் கடமைகளைச் செய்கின்றன. இரு அமைப்புகளிடையேயும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை உள்ளது.  நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதில் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளோம்.

ஆனால், இப்போது பாருங்கள்  நாங்கள்  வளர்ந்துவிட்டோம். ஒவ்வொருவரும் அவரவர் வேலையைப் பார்க்க வேண்டும்.  ஆர்எஸ்எஸ் ஒரு கலாச்சார அமைப்பு, நாங்கள்  ஒரு அரசியல் அமைப்பு.  ஆரம்பத்தில் பாஜக  திறமையில் குறைவானவர்களாக இருந்தோம். சிறியவர்களாக இருந்தோம். அதனால் அப்போது எங்களுக்கு ஆர்.எஸ்,எஸ். தேவைப்பட்டது. இன்று, நாங்கள் வளர்ந்துவிட்டோம்,  திறமை மிக்கவர்களாக ஆகிவிட்டோம். அதனால் பாஜக இப்போது சுயமாக இயங்குகிறது” என சொல்லியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ். அதிருப்தியின் விளைவு!

ஏற்கனவே மோடி பிராண்ட் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த ஆர்.எஸ்.எஸ், ஜே.பி. நட்டாவின் இந்த கருத்துகளால் கடும் அதிருப்தி அடைந்தது.  ஆர்.எஸ்.எஸ்.சின் அதிருப்தி 2024  தேர்தல்  முடிவுகளில் தெரிந்தது.

‘அந்த தேர்தலில் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு  உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாஜகவுக்கு பணியாற்றவில்லை. அதனால் உபியில் 2019 இல் 62 இடங்களில் வென்ற பாஜக, 2024 இல் 29 இடங்களை இழந்தது. வெறும் 33 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அதேபோல் மகாராஷ்டிராவில் 2029 தேர்தலில் 41 இடங்களை வென்ற பாஜக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 24 இடங்களை இழந்து, வெறும் 17 இடங்களில்தான் வென்றது.

400 சீட்டுகளை வெல்வோம் என்று  மோடி, அமித் ஷா தொடங்கி நம்மூர் அண்ணாமலை வரை கூக்குரல் எழுப்பியபோதும், ஆர்.எஸ்.எஸ்.சின் அன்டர் கரன்ட்  ஆஃப் செய்யப்பட்டதால்…  மோடி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களையே பெற முடியாமல் 241 இடங்களில் மட்டுமே ஜெயித்தார்.  ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, பிகாரின் நிதிஷ் குமார் ஆகியோர் தயவால் இப்போது கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி.

 மோடி மட்டும் போதுமா? ஆர்கனைசர்

ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே  செய்வதை  உடனடியாக வெளிப்படையாக சொல்லாது. இந்த வகையில்  நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இழந்த பிரதமராக மோடி அமர்ந்த பிறகு… ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் இதழில்  ஜூன் 2024 இல் ஒரு கட்டுரை வெளியானது.

அதன் தலைப்பு திருத்திக் கொள்வதற்கான உரையாடல் (Conversation for course correction) 

அந்தக் கட்டுரையில்,  “நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சை அணுகவே இல்லை. இதுதான் தேர்தலில் தோற்றமைக்கு  முக்கிய காரணம்.  மேலும், வேட்பாளர்கள் தேர்விலும் நம்மை ஆலோசிக்கவில்லை.  ஆர்.எஸ்.எஸ்.சை கடுமையாக விமர்சித்த  முன்னாள் காங்கிரஸ் காரர்களுக்கெல்லாம் சீட் கொடுத்தார்கள்.  

மோடியை மட்டுமே முன்னிறுத்தி மோடியை மட்டுமே வணங்கி தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று  ஓவர் கான்ஃபிடன்ஸ் கணக்கு போட்டார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள், பாஜக தலைவர்களின் அளவு கடந்த  அதீத நம்பிக்கையைதான் செக் வைப்பதாக இருக்கிறது. 400 இடங்கள் என்று மோடி முதல் அனைவரும் முழக்கமிட்டனரே… அது பாஜகவுக்கா எதிர்க்கட்சியினருக்கா  என்று அவர்கள் சிந்திக்கவில்லை. Modi visit RSS Headquarters

களத்தில் இறங்கி கடின உழைப்பை செலுத்துவதன் மூலமே இலக்கை அடைய  முடியும். சமூக தளங்களில் செல்ஃபிகளையும், விளம்பரங்களையும் ஷேர் செய்வதால் அல்ல” என்றெல்லாம் தாக்கியது அந்த கட்டுரை.

இதன் மூலம் மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான ஊடல் வெளிப்படையாகவே தெரிந்தது.

மோடி குடுமி சும்மா ஆடுமா?

இந்தப் பின்னணியில் வரும் ஏப்ரல் பிற்பகுதியில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பாஜகவின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அந்த அவகாசத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தை தேடி, நாடி சென்றிருக்கிறார் மோடி என்கிறார்கள்.

அரசியல் விமர்சகர் ஹேமந்த் தேசாய்  இதுபற்றி பேசும்போது,  

“பிரதமர் மோடியின் தலைமையில் தற்போது காணப்படும் ஆளுமை வழிபாட்டை ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்த வகையான ஆளுமை வழிபாட்டின் மீது அந்த அமைப்பின் அதிருப்தியைக் குறிக்கும் வகையில் மோகன் பகவத் அறிக்கைகளை வெளியிட்டார். இருப்பினும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட முயற்சிப்பதை நாம் காணலாம். மோடி ஆர்.எஸ்.எஸ்ஸைப் புகழ்ந்து அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்” என்று தி பிரின்ட் ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழா மற்றும் பெங்களூருவில் நடைபெறும் பாஜகவின் தேசிய செயற்குழு ஆகிய இரண்டு முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்னதாக, பிரதமரின் நாக்பூர் பயணம், இரு அமைப்புகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தின் போது பாஜக தனது புதிய தேசியத் தலைவரை அறிவிக்க வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.சுடன் கருத்தொற்றுமை காணவே மோடி நாக்பூர் சென்றதாக தெரிகிறது. ஆர்..எஸ்.எஸ்,  நாக்பூர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் ஆலோசனையிலும் மோடி ஈடுபட்டிருக்கிறார். Modi visit RSS Headquarters

பாஜகவின் புதிய தலைவர் யார்?

அடுத்த பாஜக தேசிய தலைவர் யார் என்பதில் ஆர்.எஸ்.ஸுடன் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

தென்னிந்தியாவை பாஜக புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்… இந்த முறை தென்னிந்தியாவில் இருந்தே பாஜகவின் தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே தென்னிந்தியாவில் இருந்து ஜனா கிருஷ்ணமூர்த்தி. வெங்கையா நாயுடு. பங்காரு லட்சுமணன் பாஜக அகில இந்திய தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இந்த முறை  நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜி. கிஷன் ரெட்டி,  ஆந்திர  மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஆலோசிக்கப்பட்டு வருகிறார்கள்.  ஒரிசாவை பாஜகவுக்கு வென்று கொடுத்த தர்மேந்திர பிரதான், வினோத் தவதே, பூபேந்திர யாதவ் ஆகியோரும் பாஜக தேசிய தலைவர் பட்டியல் உள்ளனர் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share