கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் ‘கங்கை நீரால்’ அபிஷேகம் செய்யும் மோடி!

Published On:

| By Mathi

Modi GC Ariyalur

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீச்சரம் கோவிலில் ‘கங்கை நீரால்’ பிரதமர் மோடி இன்று ஜூலை 27-ந் தேதி அபிஷேகம் செய்கிறார்.

தமிழ்நாட்டுக்கு ஜூலை 26-ந் தேதி இரவு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் ரூ4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்தார் மோடி. திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

திருச்சியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மோடி இன்று ஜூலை 27-ந் தேதி காலை 11 மணிக்கு ஹோட்டலில் இருந்து கார் மூலமாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். அப்போது மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

திருச்சியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார் மோடி.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்யும் மோடி, தமது தொகுதியான வாரணாசியில் இருந்து கொண்டு வந்துள்ள கங்கை நீரால் அபிஷேகம் செய்கிறார். பின்னர் கோவிலில் அமர்ந்து தியானம் செய்கிறார்.

ADVERTISEMENT

கோவில் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை மோடி வெளியிடுகிறார். இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியையும் கேட்டு ரசிக்கிறார் மோடி.

பின்னர், பிற்பகல் 1.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடையும் மோடி பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றடைகிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் வரலாறு

முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது
இம்மூன்றும், கங்கை நதிகரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய வீரத்தின் நினைவுச்சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன. அவன் தனது தலைநகரத்தை தஞ்சாவூரிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட இங்கு மாற்றினான். அவனது காலத்திலிருந்து, கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. அவர் இங்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான கற்கோவில், இடைக்கால சோழர் காலத்திய அழகான சிற்பங்கள் நிறைந்த களஞ்சியமாகும். இந்த நகரம் ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது

இராஜேந்திர சோழனின் கங்கை பயணம் அவனது ஆட்சியின் 11 வது ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏசாலம் செப்புத்தகடுகள் மூலம் கி.பி 1036 இல் முதலாம் இராஜேந்திர சோழனால் கங்கைகொண்டசோழீச்சரம் கோவில் கட்டப்பட்டதாக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகிறது. முதலாம் இராஜேந்திர சோழன் அவனது ஆட்சியின் 24 ஆம் ஆண்டில் இந்த கோவிலுக்கு கிராமங்களைத் தானமாகக் கொடுத்த விபரம், கி.பி 1068 இல் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழனின் குறிப்புகளில் இருந்து கிடைக்கப்பெறுகிறது.

இன்றளவும் வாழும் வரலாறாக உள்ள இக்கற்கோவில், முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து எடுத்து வந்த பல சிற்பங்கள், போர் நினைவுப் பரிசாக இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சந்தேஷ்வர அனுக்கிரக மூர்த்தி மற்றும் சரஸ்வதி ஆகியவை இக்கோவிலுள்ள அழகிய சிற்பங்கள் ஆகும். தற்போது இக்கோவில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களுள் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது (மூலம்: https://ariyalur.nic.in)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share