நான் கடவுளின் தூதர் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், கடவுள் பற்றி முன்னாள் முதல்வர் கலைஞர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நான் கடவுளின் தூதர்
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் டெல்லி, ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மே 21ஆம் தேதி நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில், “என் அம்மா உயிருடன் இருந்தவரை நான் உயிரியல் ரீதியாக பிறந்திருப்பேன் என்று நம்பினேன். ஆனால், அவர் மறைவிற்கு பிறகு, நடந்த அனுபவங்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது நான் நினைத்தது தவறு என்று தோன்றுகிறது.
கடவுள் தான் என்னை அனுப்பியிருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால், நான் பயாலஜிக்கல் ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பில்லை” என்று மோடி கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடவுள் பற்றி கலைஞர்
அந்த வகையில், கடவுள் பற்றி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஒரு மேடையில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “பத்மநாபன் இந்த மேடையில் பேசியபோது என்னை தெய்வம், இதய தெய்வம் என்று குறிப்பிட்டார்.
நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன், என்னை தெய்வம் தெய்வம் என்று சொல்லி தெய்வத்தை இழிவுப்படுத்தாதீர்கள். என்னையும் கேலி செய்யாதீர்கள்.
நான் இப்போது கூட தொடர்ந்து 5, 6 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு உடம்பு வலியுடன்தான் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன்.
நான் தெய்வம் என்றால், தெய்வத்திற்கு உடம்பு வலி வருமா? தெய்வத்திற்கு தலைவலி, கால் வலி, கண் வலி எல்லாம் வருமா?
தெய்வத்திற்கு இதயம் தொடர்பான பிரச்சனை வருமா? கிட்னி சம்மந்தமான பிரச்சனை வருமா?
எனவே, என்னை தெய்வம் என்று சொல்லி தெய்வத்தை இழிவுப்படுத்தாதீர்கள். அதேபோல்தான், என்னையும் கேலி பேசாதீர்கள்.
ஏனென்றால், தெய்வம் பேசாது, நான் பேசுகிறேன். என்னை தெய்வமாக்கிவிடாதீர்கள்.” எனப் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தன்னை கடவுளின் தூதர் என்று பேசிய நிலையில், கலைஞரின் இந்த பேச்சை திமுகவினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.