Delimitation : எங்க போராட்டத்தின் முடிவல்ல.. தொடக்கம் தான் – பிரதமர் மோடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Modi

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி இன்று கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு ஆதவாக வாக்கு சேகரிக்க வந்தார். தனி விமானத்தில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி கோவை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்திற்கு பிரதமர் மோடி சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தினரிடையே பிரதமர் பேசுகையில் வழக்கம்போல் என் அன்பான சகோதர சகோதரிகளே வணக்கம் என்றார். மேலும் கோவையில் இருக்கும் மருதமலை முருகப்பெருமானுக்கும் கோனியம்மனுக்கும் என் பிரார்த்தனைகளை காணிக்கையாக்குகிறேன் என்று கூறி தனது பேச்சை தொடங்கினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய பிரதமர், “சில நாட்களுக்கு முன்புதான் உலகெங்கிலும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகள் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார்கள். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, உங்கள் அனைவரின் உடல் நலம், சந்தோஷம், நல்வாழ்வு ஆகியவற்றிற்காக என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு என்பது புதிய நம்பிக்கையையும், புதிய சக்தியையும், புதிய தொடக்கத்தையும் கொண்டு வருவது. இந்த வேளையில் தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள், என்டிஏவின் வெற்றியையும், திமுகவின் வெளியேற்றத்தையும் ஒரு தெளிவான செய்தியாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

கொங்கு நாட்டு மக்களையும், குறிப்பாக கோவை உழைப்பாளிகளையும், பாசமிகு மக்களையும் சொந்தமாகக் கொண்ட இந்தப் பூமி, வளர்ச்சி அரசியலுக்கு பக்கபலமாகவும், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஊற்றுத் தோழனாகவும் நீங்கள் எப்போதும் உறுதியாக இருந்து வந்திருக்கிறீர்கள்.
ஆகையால்தான் நான் இங்கு எப்போது வந்தாலும் உங்களில் ஒருவனாகவே வருகிறேன்.

இன்று உங்களிடையே எனது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் முன்வைக்க விரும்புகிறேன். 2023ஆம் ஆண்டில் நாங்கள் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினோம். இந்த மாதம் 16ஆம் தேதி நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல் செய்யும் வரலாற்றுப் பூர்வமான படியை எடுத்து வைத்தோம். தனிப்பட்ட முறையில் கூட நான் எல்லா அரசியல் கட்சிகளிடமும் ஆதரவு கேட்டேன். “எல்லா பாராட்டையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெளிவாகக் கூறினேன்.

ADVERTISEMENT

எனக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான். சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த எனது சகோதரிகள் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த உயர்வான முயற்சி தோல்வியடைந்தது. திமுகவும் காங்கிரசும், அவர்களுடைய கூட்டாளிகளும் வெறுப்பு அரசியலுக்கும், கீழ்த்தரமான அரசியலுக்கும் இதை இறையாக்கினார்கள்.

இந்த மசோதா சட்டமாகி இருந்தால், சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் எம்பிக்களாகவும் எம்எல்ஏக்களாகவும் ஆகியிருப்பார்கள். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டுக்கு அதிக இருக்கைகள் கிடைப்பதாக இருந்தது. ஆனால் திமுக இதைத் தெளிவாக விரும்பவில்லை. இப்போது திமுகவின் செயல்கள் தெளிவாக அம்பலமாகிவிட்டன. குட்டு வெளிப்பட்டுவிட்டது. கருப்பு உடைகள் அணிந்து திமுக தங்கள் தீய எண்ணங்களுக்கு திரை போட முடியாது. உங்களுடைய கெட்ட செயல்களின் பலன்களிலிருந்து இனி தப்பவே முடியாது. மக்கள் உங்களின் உண்மையான முகங்களைத் தெரிந்து கொண்டுவிட்டார்கள். பொய்களைப் பேசத் தெரிந்த திமுகவால் இனிமேல் புரட்டுக்களை, புனை சுருட்டுகளை மறைக்க முடியாது.

தமிழர்களே, உங்களுக்கு நான் ஒன்று உறுதியாகக் கூற விரும்புகிறேன்: இது எங்களுடைய போராட்டத்தில் முடிவல்ல, இது தொடக்கம் தான். பா.ஜ.க.வும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் உங்களுடைய உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருவார்கள். இது எங்களுடைய உறுதிப்பாடு.

இன்று பெருமையாகச் சொல்லிக் கொள்ள திமுகவிடம் எந்த சாதனைகளும் இல்லை. குற்றம் சாட்ட உண்மையான எந்தப் பிரச்சனைகளும் இல்லை. அதனால்தான் தமிழ்நாட்டின் இருக்கைகள் குறைப்பு பற்றி பொய்யான பயங்களைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் தக்க வைக்கப்பட வேண்டும் என்று திமுக முன்பு கூறியது. நாங்கள் இதன் அடிப்படையில்தான் மசோதாவை முன்வைத்தோம். ஆனால் அப்போது ஒன்று சொன்னார்கள், இப்போது மாற்றிப் பேசுகிறார்கள்.

சாதாரண பெண்கள் உயர்வடைந்தால் ஏன் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எரிகிறது? இந்த ஏனென்றால் ஒற்றைக் குடும்பக் கட்சிகள் அதிகாரம் தங்கள் குடும்பத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றன.

தமிழ்நாட்டில் இன்று பெண்களும், சிறு குழந்தைகளும் குற்றவாளிகளால் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள். வன்முறை மற்றும் குற்றங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் பெண்களுக்கு தீங்கிழைக்கிறது திமுக. இது மட்டுமா? நாடாளுமன்றத்திலும் கூட இவர்கள் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை. ஆனால் இப்போது பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு சரியான பதில் திமுகவிற்கு கண்டிப்பாகக் கிடைக்கும்.

நான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சகோதரிகளிடமும் கூறிக் கொள்கிறேன். திமுகவினரை நீங்கள் எங்கே பார்த்தாலும் அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள். பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மசோதாவை ஏன் எதிர்த்தார்கள் என்று கேளுங்கள். பெண்களுக்கான இந்தப் பொன்னான வாய்ப்பை ஏன் தமிழ் பெண்களுக்கு மறுத்தார்கள் என்று கேளுங்கள்.மேலும், ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்று தெளிவான, பலமான செய்தியை அவர்களுக்கு நீங்கள் அளித்திடுங்கள்.” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share