“காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பரம்பரை சொத்து வரி விதித்து உங்கள் குழந்தைகளின் சொத்துக்களை பறித்துவிடுவார்கள்” என்று பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 24) குற்றம்சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் ஆபத்தான நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இப்போது பரம்பரை வரி விதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
அரச குடும்ப இளவரசரின் ( ராகுல் காந்தி) ஆலோசகர் (சாம் பிட்ரோடா) நடுத்த குடும்பத்தினர் மீது அதிகளவில் வரி விதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
இதை அவர் (சாம் பிட்ரோடா) பொதுவெளியில் பகிரங்கமாகவே சொல்கிறார். அதாவது பெற்றோர்களிடமிருந்து அவர்களது குழந்தைகள் பெறும் சொத்துக்கு வரி விதிக்கப்படும் என்கிறார்கள். இப்போது பஞ்சா, (காங்கிரஸ் கை சின்னம்) உங்களது குழந்தைகளிடம் இருந்து சொத்துக்களை பறித்துவிடும்.
நீங்கள் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸ் உங்கள் மீது வரி விதிக்கும். நீங்கள் இறந்த பிறகு உங்கள் பரம்பரையின் மீது வரி விதிப்பார்கள். அவர்கள் (காங்கிரஸ்) உங்கள் சொத்துக்களையும், உங்கள் குழந்தைகளின் உரிமைகளையும் பறிக்க நினைக்கிறார்கள்.
சாமானிய இந்தியர்கள் தங்கள் சொத்துக்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. நம் வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி தங்களுடைய சிறிய ஆபரணங்களைக் கூட தங்கள் பேரக்குழந்தைகளின் திருமணத்திற்காக பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
இந்திய மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். தேவைக்கேற்ப செலவு செய்துவிட்டு மீதமுள்ளவற்றை தங்கள் எதிர்கால சந்ததிக்காக சேமிக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் சிந்தனை எவ்வளவு பழமையானது என்பதை அவர்களது பரம்பரை வரி பேச்சின் மூலமாகவே தெளிவாக தெரிகிறது. உங்கள் வீடு, தோட்டம், கடைகள், சொத்துக்கள் மீது காங்கிரஸ் கட்சி கண்ணாக இருக்கிறது. காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் எக்ஸ்- ரே எடுப்பேன் என்று கூறுகிறார்.
நம் தாய், சகோதரிகளிடம் உள்ள சிறிய ஆபரணங்களைக் கூட காங்கிரஸ் கண்காணிப்பார்கள். பழங்குடியினரின் ஆபரணங்கள் மற்றும் தாலியை காங்கிரஸ் பறித்துவிடுவார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா பேசியது என்ன?
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில், பரம்பரை வரி பற்றி பேசியிருந்தார்.
அதில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்துவரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும் போது தங்களது குழந்தைகளுக்கு 45 சதவிகிதத்தை மட்டுமே கொடுக்க முடியும். மீதமுள்ள 55 சதவிகிதம் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தப்படும்
இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். உங்கள் தலைமுறையில் நீங்கள் சம்பாதித்த பணத்தை, பொதுமக்களுக்காக பாதி விட்டுக்கொடுக்க வேண்டும். இது எனக்கு நியாயமாக தெரிகிறது” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு பாஜக தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், தனது பேச்சு திரித்து வெளியிடப்பட்டதாக சாம் பிட்ரோடா விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக பிரதமர் மோடி பேசி வரும் பொய்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, பரம்பரை வரி தொடர்பாக நான் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிடுகின்றன.
அமெரிக்காவில் உள்ள பரம்பரை வரி சட்டத்தை ஒரு உதாரணமாக மட்டுமே நான் குறிப்பிட்டேன். இது மக்கள் விவாதிக்க வேண்டிய பிரச்சனை என்றே தெரிவித்தேன். இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் பேசியதற்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியின் கொள்கைகளுக்கும் தொடர்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நயினார் நாகேந்திரன் மீது ED விசாரணை கோரிய மனு : உயர் நீதிமன்றம் உத்தரவு!
Comments are closed.