தனது பரபரப்பான பிரச்சாரத்திற்கு இடையே மே 30-ஆம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதி தனது தியானத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பினார்.
இந்தநிலையில், கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்ட அனுபவம் குறித்து மோடி நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்.
அதில்,
“ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான 2024 நாடாளுமன்ற தேர்தல் நம் நாட்டில் நிறைவடைந்துள்ளது. கன்னியாகுமரியில் மூன்று நாள் ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு, இப்போது தான் டெல்லிக்கு விமானம் ஏறியிருக்கிறேன். இந்த நாட்களில் காசி மற்றும் பல பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தற்போது என்னுடைய மனம் பல்வேறு அனுபவங்களாலும், உணர்ச்சிகளாலும் நிறைந்திருக்கிறது. என்னுள் எல்லையற்ற துவண்டுவிடாத ஆற்றல் ஓட்டத்தை உணர்கிறேன்.
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திர போராட்ட பூமியான மீரட்டில் இருந்து சில மாதங்களுக்கு முன்பாக என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினேன். தொடர்ந்து இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் என்னுடைய கடைசி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டேன். ஹோஷியார்பூர் என்பது குருக்களின் பூமியாகும்.
அதன்பின்னர் கன்னியாகுமரிக்கு அதாவது பாரத மாதாவின் காலடிக்கு வந்தேன். தேர்தல் உற்சாகம் என் உள்ளத்தில் எதிரொலித்தது இயற்கையான ஒன்றுதான். பேரணிகளிலும் ரோடு ஷோக்களிலும் பார்த்த பல முகங்கள் என் கண் முன்னே வந்தன.
பெண்களின் ஆசீர்வாதம், நம்பிக்கை, பாசம் இவை அனைத்தும் ஒரு புதுவிதமான அனுபவத்தை தந்தது. என் கண்கள் ஈரமாகிக்கொண்டிருந்தன. ஒரு தியான நிலைக்குள் நான் நுழைந்தேன்.
சூடான அரசியல் விவாதங்கள், எதிர் தாக்குதல்கள் போன்றவை தேர்தலின் சிறப்பியல்பாகும். தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் அனைவரும் ஒரு வெற்றிடத்தில் மறைந்தனர்.
ஒரு விதமான பற்றின்மை உணர்வு எனக்குள் வந்ததை நான் உணர்ந்தேன். என் மனம் வெளி உலகில் இருந்து முற்றிலும் விலகிவிட்டது.
இவ்வளவு பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் என்பது மிகவும் சவாலானது. ஆனால், கன்னியாகுமரி நிலப்பரப்பும், சுவாமி விவேகானந்தரின் உத்வேகமும் அதனை சிரமமின்றி செய்ய வைத்தது. வேட்பாளரான நான், எனது பிரச்சாரத்தை அன்புக்குரிய காசி மக்களின் கைகளில் விட்டுவிட்டு இங்கு வந்தேன்.
பிறப்பிலிருந்தே இந்த விழுமியங்கள் என்னுள் இருந்ததற்காக, கடவுளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் தியானத்தில் இருந்தபோது எந்தவிதமான அனுபவத்தைப் பெற்றிருப்பார் என்று நானும் யோசித்துக்கொண்டிருந்தேன். எனது தியானத்தின் ஒரு பகுதி இதுபோன்ற எண்ண ஓட்டத்திலேயே கழிந்தது.
இந்த பற்றின்மைக்கு மத்தியில், பாரதத்தின் பிரகாசமாக எதிர்காலம் மற்றும் இலக்குகள் குறித்து என்னுடைய மனம் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிந்தது.
குமரியில் அதிகாலை உதித்த சூரியன் என் எண்ணங்களுக்கு புதிய உயரங்களைத் தந்தது. கடலின் பரந்த தன்மை என் எண்ணங்களை விரிவுபடுத்தியது. மேலும், இந்த பிரபஞ்சத்தின் ஒற்றுமையை தொடர்ந்து எனக்குள் உணர்த்தியது.
கன்னியாகுமரி எப்போதும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு இடமாகும். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம் ஆர்எஸ்எஸ் தலைவர் ஏக்னாத் ரணாடே தலைமையில் கட்டப்பட்டது. ஏக்னாந்த் ஜியுடன் அடிக்கடி கன்னியாகுமரி வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இந்த நினைவிடம் கட்டும்போது கன்னியாகுமரியில் நேரம் செலவிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஆழமாக பதிந்திருக்கும் அடையாளமாக விவேகானந்தர் மண்டபம் உள்ளது. மேலும், சக்தி பீடமாக இது இருக்கிறது.
இந்த தெற்கு முனையில் மகா சக்தி தவமிருந்து பாரதத்தின் வடமுனையில் இமயமலையில் வசிக்கும் பகவானுக்காக காத்திருந்தார்.
முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. நம் நாட்டின் உள்ள புனித நதிகள் வெவ்வேறு கடல்களில் கலக்கின்றன. இங்கே அந்த கடல்கள் சங்கமிக்கின்றன. மேலும், பாரதத்தின் கருத்தியல் சங்கமத்தையும் இங்கே நாம் காண்கிறோம்.
விவேகானந்தர் பாறை நினைவகம், திருவள்ளுவரின் பிரமாண்ட சிலை, காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். இந்த தலைவர்களின் சிந்தனை ஓட்டங்கள் தேசிய சிந்தனையாக இங்கு சங்கமிக்கின்றன. இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் உத்வேகத்தை உருவாக்குகிறது.
பாரதம் மற்றும் தேசியத்தின் ஒருமைப்பாட்டின் மீது சந்தேகம் கொண்ட நபர்களுக்கு ஒருமைப்பாட்டின் அழியாத செய்தியை கன்னியாகுமரி நிலம் வழங்குகிறது.
திருக்குறள் அழகிய தமிழ்மொழியின் மணிமகுடங்களில் ஒன்றாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த தேசத்திற்காக நன்மைகளை செய்ய நம்மை உத்வேகமூட்டுகிறது. இவ்வளவு பெரிய ஆளுமைக்கு எனது மரியாதையை செலுத்துவது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
150 மாவட்ட ஆட்சியர்களிடம் அமித்ஷா பேசினாரா? தேர்தல் ஆணையர் பதில்!
Comments are closed.