அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு, அதனை நாங்கள் தடுப்பதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நேற்று பேரணி நடைபெற்றது.
இந்தநிலையில், தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி நேற்று நேர்காணல் அளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி போன்ற தன்னாட்சி அமைப்புகளை எதிர்க்கட்சிகளை பழிவாங்க பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அவர் பேசியபோது, “அமலாக்கத்துறை எங்களால் உருவாக்கப்பட்டதா? பிஎம்எல்ஏ சட்டம் நாங்கள் தான் கொண்டு வந்தோமா? நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இதெல்லாம் இருக்கிறது.
அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. அது சுதந்திரமாக செயல்படுகிறது. அதை நாங்கள் தடுப்பதும் இல்லை, எதிர்க்கட்சிகளை பழிவாங்க அனுப்புவதுமில்லை.
அமலாக்கத்துறையுடன் எங்களுக்கு நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. இப்போது கூட சுமார் 7 ஆயிரம் வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதில் அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகள் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை ரூ.35 லட்சம் பணம் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். ஆனால், இந்த 10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடி ரூபாய் கைப்பற்றியுள்ளோம்.
அமலாக்கத்துறையின் ரெய்டுகள் வெளியில் யாருக்கும் தெரியாது. அதனால் தான் மூட்டை மூட்டையாக பணம் பிடிபடுகிறது. வாஷிங் மெஷின், வீட்டின் பைப் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பணத்தை மறைத்து வைத்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி ஒருவர் வீட்டில் இருந்து ரூ.300 கோடி கைப்பற்றியுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் வீட்டிலிருந்தும் அதிகளவில் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் ஊழல் பணம் கைப்பற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்ட பணம். மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி அமலாக்கத்துறை முடக்கி வைத்திருக்கிறது.
சிலரிடம் டிரைவர் வேலை வாங்கி தருகிறேன், ஆசிரியர் வேலை வாங்கி தருகிறேன் என பணம் வசூலிக்கிறார்கள்.
நான் சில சட்ட வழிமுறைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். யார் யாரெல்லாம் பணம் கொடுத்தார்களோ அவர்களுக்கு மீண்டும் பணத்தை திருப்பி தர முடியுமா என்று நான் முயற்சி செய்கிறேன்.
இதுவரை நாங்கள் ரூ.17 ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றப்பட்ட மக்களிடம் திருப்பி கொடுத்திருக்கிறோம். மக்கள் அதை பாராட்டுகிறார்கள்.
யாராக இருந்தாலும் அமலாக்கத்துறையை பொறுத்தவரை ஒரே நடைமுறை தான். பாஜகவை சேந்த ஒருவரது வழக்கை முடித்துவைத்துவிட்டோம் என்று நீங்கள் ஒற்றை உதாரணம் காட்டமுடியுமா?
அமலாக்கத்துறை தானாக முன்வந்து எந்த வழக்கையும் போட முடியாது. நாட்டின் பல்வேறு விசாரணை அமைப்புகள் வழக்குகள் பதிந்திருந்தார்கள் என்றால், அதன் பின்னர் தான் அந்த வழக்குகளின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியும்.
பிஎம்எல்ஏ சட்டத்தை முடக்க வேண்டும் என்று 150 நீதிமன்றங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வேலை செய்யக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
ஊழலுக்கு எதிரான மோடியின் நடவடிக்கை தொடரும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் நீதிமன்றத்தின் மூலம் அமலாக்கத்துறையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்திவிடலாம் என நினைக்கிறார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆட்டோவில் சென்றதற்கு ரூ.7.66 கோடி கட்டணமா? – வைரல் வீடியோ!
என்டிஏ கூட்டணியில் அதிமுக இல்லாதது வருத்தமில்லை: மோடி