“இந்தியா கூட்டணியின் முக்கிய தூணாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இருக்கிறார்” என்று பிரதமர் மோடி இன்று (மே 2) தெரிவித்துள்ளார். Modi says pinarayi vijayan
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரூ.8,900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று (மே 2) அர்ப்பணித்தார்.
இந்த துறைமுகமானது அதானி துறைமுகங்கள் மற்றும் APSEZ உதவியுடன் பொது – தனியார் கூட்டமைப்பின் கீழ் கட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி சசிதரூர், அதானி குழுமத்தின் நிறுவனர் கெளதம் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மோடி பேசும்போது, “விழிஞ்சம் துறைமுகத்தின் மூலமாக நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த துறைமுகமானது வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இது கேரளாவுக்கும், இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு காலத்தில் கடல்சார் வர்த்தகத்தில் கேரளா குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. மக்கள் அரபிக் கடல் வழியாக வணிகத்திற்காக பிற நாடுகளுக்குச் சென்றனர். கடல் வர்த்தகத்தை மீண்டும் வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் இவ்வளவு பெரிய துறைமுகத்தை அதானி நிறுவனம் கட்டியிருப்பது குஜராத்தில் உள்ள மக்களுக்குத் தெரிந்தால், அவர்கள் வருத்தப்படக்கூடும். இந்த பெரிய துறைமுகத்தை அதானி இன்னும் குஜராத்தில் கட்ட முடியவில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கப்பல்கள் துறைமுகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் அவற்றின் வேகம் பாதிக்கப்பட்டது. ஆனால், தற்போது துறைமுகங்களின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் மேடையில் அமந்துள்ள முதல்வர் பினராயி விஜயன், சசி தரூர் ஆகியோருக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணியின் முக்கிய தூணாக பினராயி விஜயன் இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சி பலரின் தூக்கத்தை கெடுக்கப் போகிறது” என்று தெரிவித்தார். Modi says pinarayi vijayan
