அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் உற்றுநோக்கும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்று பிரதமர் மோடி இன்று (ஜூன் 7) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பிரதமர் மோடி இன்று உரிமை கோரினார்.
பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “பிரதமராக பதவியேற்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று எனக்கு அழைப்பு விடுத்தார். மேலும், பதவியேற்பு விழா பற்றிய தகவலையும் என்னிடம் கேட்டறிந்தார்.
ஜூன் 9-ஆம் தேதி மாலை பதவியேற்பு விழா நடத்தினால் வசதியாக இருக்கும் என்று அவரிடம் கூறினேன். அமைச்சர்கள் பட்டியலை தயாரித்து விரைவில் குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளோம். பின்னர் பதவியேற்பு விழா நடைபெறும்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல் இது. நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை மூன்றாவது முறையாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஒவ்வொரு துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளது.
25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறியது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டிய தருணம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் உற்றுநோக்கும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்று உறுதியாக இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகம் பல பேரழிவுகள், நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இவ்வளவு பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் மத்தியில் நாம் போற்றப்படுகின்றோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி
பாஜக கூட்டணி…. அனுமானத்தின் அடிப்படையில் வேலுமணி பேசுகிறார்: ஜெயக்குமார்
Comments are closed.