விவேகானந்தர் பாறையில் மோடி தியானம்; கடலுக்கு அடியில் கண்காணிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்!

Published On:

| By vivekanandhan

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக மூன்று நாட்கள் பயணமாக இன்று மாலை தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரச்சாரம் முடிவடைந்த பிறகு கேதார்நாத் மலைப்பகுதியில் குகை ஒன்றில் தியானம் மேற்கொண்டார். இந்த முறை எதிர்மறையாக மலையிலிருந்து மாறி, கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடியின் இந்த பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாகவே உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் முப்படையான கடற்படை, தரைப்படை, விமானப்படை மற்றும் மத்திய உளவுத் துறை மூலமாகவும் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதைச் சார்ந்த கடற்பகுதிகளில் கண்காணிக்கத் துவங்கி, தியானம் செய்யவுள்ள மண்டபம் பற்றியும், அதைச் சுற்றியுள்ள கடற்பகுதியைப் பற்றியும் பாதுகாப்பு ரிப்போர்ட் அளித்தனர். அதன்பிறகு மே 27 அன்று மோடியின் கன்னியாகுமரி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இன்று மோடி தமிழ்நாட்டிற்கு வரும் நிலையில், கப்பற்படையின் ரோந்து கப்பல்கள் மற்றும் மிதக்கும் கப்பல்கள் மூலம் கடற்பரப்பு தீவிர கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளது. சீன நடமாட்டம் எதுவும் இருந்துவிடக் கூடாது என்றும், அருகில் இலங்கை இருப்பதால், கடலுக்குள்ளும் கடலுக்கு மேலேயும் எந்தவிதமான எதிரிகளின் நடமாட்டமும் இருந்துவிடக் கூடாது என்றும், கண்காணிப்பதற்காக கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சோனார் கருவிகள் மூலம் கண்காணித்து வருகின்றனர். கடல் பகுதிக்கு மேல் கப்பல் படையினர் மற்றும் விமானப் படையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் உயர்மட்டப் பாதுகாப்புக் கருதி அரக்கோணத்திலிருந்து ஐ.என்.எஸ் & ராஜாளி தளத்திலிருந்தும், ராமேஸ்வரம் ராணுவ விமான தளத்திலிருந்தும் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சோனார் செயல்படும் விதம் – சித்தரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் தமிழக காவல்துறையில் உள்ள Q பிரிவு போலீசார், SBCID போலீசார் மற்றும் முஸ்லீம் தீவிரவாத தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் சல்லடை போட்டு சலித்து சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, எஸ்.பி மற்றும் கூடுதல் டிஜிபி வரை வாக்கி டாக்கியைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே சென்னைக்கு மோடி வந்த போது, வாக்கி டாக்கி மற்றும் மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை என்று பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்த முறை எந்தவிதமான சலசலப்பும், பாதுகாப்பு குளறுபடிகளும் இந்த முறை வந்துவிடக் கூடாது என்று வாக்கி டாக்கிகள் மற்றும் மெட்டல் டெடெக்டர்களும் பல பரிசோதனைகளுக்குப் பிறகே பாதுகாப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. கூடுதலாக தமிழக காவல்துறை சார்ந்த கடலோர பாதுகாப்புப் படையினரும் தீவிரமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடி தமிழ்நாட்டிலிருந்து டெல்லி திரும்பும் வரை பாதுகாப்பில் எந்த குளறுபடிகளும் வந்துவிடக் கூடாது என தமிழ்நாடு காவல்துறையினர் டென்ஷனில் இருந்து வருகின்றனர் என்கிறார்கள். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழ்நாட்டில் காரைக்குடிக்கு வருவதால் தமிழக காவல்துறை உச்சகட்ட பரபரப்பில் இருந்துவருகிறது.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குமரி வரும் மோடி : சென்னையில் கோ பேக் போஸ்டர்கள்… நெல்லையில் போராட்டம்!

கோட்சே வழி வந்தவர்களுக்கு காந்தியை பற்றி தெரியாது… மோடிக்கு ராகுல் பதிலடி!

ஆளில்லா கிராமமான மீனாட்சிபுரம் – எப்படி தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share