இந்தியாவில் திராவிடம் என்பது இல்லை, பஞ்ச திராவிடம் தான் இருந்தது என்றும் இந்த நாட்டின் பிரதமர் கூட திராவிடர் தான் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று (ஜூலை 12) “ உங்கள் மாம்பலம் செயலி “ என்ற மக்கள் குறை தீர்ப்பு செயலி அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.
இதில் பாஜக தலைவர் கே.அண்ணாமலை, சென்னை 134 வார்டு மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் மற்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய ஹெச்.ராஜா, “முதல் முதலில் 2004ம் ஆண்டு நான் உமா ஆனந்தனை சந்தித்தது ஒரு போராட்ட களத்தில் தான். 18 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து அவர் மக்கள் பணி செய்து வருகிறார். தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு மாறாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதற்காக அடையாளமாக இருப்பது நம்முடைய கோவில்கள் தான். நம் கோவில்கள் இல்லை என்றால் இன்று இந்து மதம் இல்லை, சனாதான தர்மம் இல்லை.
இன்றைக்கு ஒரு சரியான விஷயத்தை ஆளுநர் பேசினால் சர்ச்சை ஆகிறது. இந்தியாவில் திராவிடம் என்பது இல்லை, பஞ்ச திராவிடம் தான் இருந்தது. இந்த நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான். இந்தப் பகுதியில் பாஜகவை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றதால் அயோத்தியா மண்டபத்தை அரசாங்கம் கைப்பற்ற முயல்கிறது. இந்த செயலியை பற்றி சென்னையில் இருக்கின்ற 200 வார்டுகளிலும் தெரியபடுத்த வேண்டும். அடுத்த மாநகராட்சி தேர்தல் வரும் போது சென்னை மாநகராட்சி மேயர் பாஜகவை சார்ந்தவராக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.
அண்மையில், வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரலாற்றாளர்கள் விந்திய மலையை அடிப்படையாக வைத்து, விந்திய மலைக்கு வடக்கில் உள்ளவர்கள் வட இந்தியர்கள் என்றும், தெற்கில் உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். திராவிடம் என்பதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள் தான் என்று கூறிய நிலையில் பிரதமர் கூட திராவிடர் தான் என்று ராஜா கூறியுள்ளார்.
–மு.வா.ஜெகதீஸ் குமார்
