மோடிக்கு தோல்வி பயம்: ஸ்டாலின் தாக்கு!

Published On:

| By Kavi

modi is afraid of election failure

திமுகவை குறை சொல்ல பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 28) தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

“மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆளும் திமுக அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இனி திமுகவே இருக்காது. திமுக அகற்றப்படும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

திமுகவினருக்கு இன்று (பிப்ரவரி 29) அவர் எழுதிய கடிதத்தில், “இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திட நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானதாகும். பாசிசத்தை வீழ்த்திட, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மாநில உரிமைகளை மீட்டிட, ‘இந்தியா’ கூட்டணி வென்றிட வேண்டும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயக போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

ADVERTISEMENT

எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும். பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர்.

நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழவர்களை, நிலத்தில் இருந்து விரட்டுவது அது.

குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம். ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடி அவர்களுக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.

அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களை கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்” என விமர்சித்துள்ளார்.

மேலும், “பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது.

‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ ஒலித்திடும் வகையில் உடன்பிறப்புகளின் களப்பணிகள் வீடு வீடாகத் தொடரட்டும். ‘நாற்பதும் நமதே – நாடும் நமதே’ என்கிற இலக்கினை அடைந்திடும் வகையில் உங்களின் உழைப்பு அமையட்டும். அது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கட்டும். அதுதான் உடன்பிறப்புகளாகிய நீங்கள் உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிடும் இனிய பிறந்தநாள் பரிசாகும். கலைஞருக்கு அவரது நூற்றாண்டு விழாவில் நாம் அளிக்கும் உண்மையான பரிசாகும்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சீனா கொடி சர்ச்சை : அனிதா ராதா கிருஷ்ணன் பதில்!

பாஜக விளம்பரத்தில் கார்த்தி மனைவி.. திமுக விளம்பரத்தில் சீனா கொடி.. எங்கே நடந்தது தவறு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share