வைஃபை ஆன் செய்ததும் மெசஞ்சர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் எல்லாவற்றிலும் இருந்து ரஜினியின் அடுத்த மூவ் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.அத்தனை கேள்விகளுக்கும் சேர்த்து வாட்ஸ் அப் தனது பதிலை டைப் செய்யத் தொடங்கியது.
“ஆகஸ்டு 6 ஆம் தேதி டெல்லியில் பிரதமரை சுதந்திர தின அமிர்த விழா கொண்டாட்டத்துக்கான ஆலோசனை கூட்டத்தில் சந்தித்த ரஜினி, அடுத்த இரு நாட்களில் அதாவது ஆகஸ்டு 8 ஆம் தேதி தமிழகம் திரும்பி சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தார்.
ஆளுநர் மாளிகையில் ரஜினிக்கு என்ன வேலை என பலரும் கேள்விகள் எழுப்பியநிலையில், சந்திப்பு முடிந்து தன் வீட்டுக்குச் சென்ற ரஜினிகாந்த் வீட்டுவாசலிலேயே நிருபர்களை சந்தித்து, ‘ஆளுநரிடம் அரசியல் பற்றி விவாதித்தேன். அதுபற்றி ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியாது’ என்று பேட்டியும் கொடுத்தார்,
பாஜக ஆட்சியில் ஆளுநர்கள் நடத்தும் அரசியல் பற்றி பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி வந்ததில் இருந்தே அவருக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி கூட ஆளுநர் மாளிகையில் தான் தமிழக பாஜக நிர்வாகிகளை நள்ளிரவு வரை சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் சொந்த கட்சி கூட்டம் நடத்தலாமா என்று அப்போதும் விமர்சனங்கள் முளைத்தன.
இந்த நிலையில், ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி வெளிப்படையாக சொன்ன பிறகு மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘அது ஆளுநர் மாளிகையா அல்லது அரசியல் பேசும் இடமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னை சந்தித்த ரஜினியின் அரசியல் கருத்து பற்றி அதிருப்தி அடைந்திருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஆர்.என்.ரவி புதிய ஆளுநராக தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்ட சில தினங்களிலேயே ரஜினி சார்பில் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது.
அதையடுத்து ஆளுநர் தேதி கொடுத்த போதும் ரஜினியால் வரமுடியவில்லை. ஷூட்டிங் காரணமாக வெளி மாநிலத்தில் இருப்பதாக தெரிவித்து இது தொடர்பாக ஆளுநருக்கு சாரி என தகவலும் அனுப்பினார் ரஜினிகாந்த், இந்த நிலையில்தான் ஆகஸ்டு மாதத்தில் ரஜினி தரப்பில் இருந்து மீண்டும் ஆளுநரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டது.
இந்த முறை குறித்த நேரத்தில் வந்து ஆளுநரை சந்தித்தார் ரஜினி. பொதுவான விஷயங்களையும் தமிழகத்தின் ஆன்மீக தலங்கள் பற்றியும், ஆன்மிக அரசியல் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், வெளியே போய் அரசியல் பற்றி விவாதித்தோம் என்று சொல்லியிருக்கிறார். ரஜினியின் இந்த பேட்டி மீது ஆளுநர் லேசான அதிருப்தியில் இருப்பதாகவே தெரிகிறது’ என்கிறார்கள் ஆளுநர் மாளிகை வட்டாரங்களில்.
இதே நேரம் ரஜினி மீண்டும் டெல்லி செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறார். சுதந்திர தின கொண்டாட்டங்களில் டெல்லியில் கலந்துகொள்வதற்காக ரஜினி அழைக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து விசாரித்தபோது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. ‘கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்ற மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் ரஜினி கலந்துகொண்டார். மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு நேர் எதிரில் முக்கியத்துவம் கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தார் ரஜினி.
ரஜினிக்கான இந்த முக்கியத்துவம் திமுகவிலேயே சிலரின் கவனத்தை கூட உறுத்தியது. அதே நிகழ்வில் தமிழ் கலாசாரம் பற்றிய கலை நிகழ்வை கமல் தன் குரலால் தொகுத்திருந்தார். மோடி இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே திமுகவின் அழுத்தத்தால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற ஒரு பேச்சு தமிழக பாஜகவிலேயே பலமாக இருக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வராததால் பாஜக போட்டு வைத்த திட்டமெல்லாம் பொய்யாய் போனது. அதன் பின் அண்ணாமலை தமிழக பாஜக தலைவரான பிறகு பாஜக பிரமுகர்கள் சிலர், ‘திமுகவினர் நிழல் அண்ணாமலையை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
ஆனால் நிஜ அண்ணாமலையை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று ஸ்டாலினுக்கு சவால் விட்டுப் பேசினர். அதாவது ஸ்டாலின் தான் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்துவிட்டார் என்பதுதான் அதன் அர்த்தம்.
தமிழ்நாட்டில் கமல், ரஜினி என இரு பெரும் மாஸ் நடிகர்களையும் முதல்வர் ஸ்டாலின் தனது பர்சனல் எல்லைக்குள் கொண்டுவந்துவிட்டார் என்ற சந்தேகம் பாஜகவுக்கும் குறிப்பாக மோடிக்கும் தற்போது தீவிரமாக ஏற்பட்டிருக்கிறது.
அதனால்தான் ஸ்டாலினிடம் இருந்து ரஜினியை கவர்ந்துவிட வேண்டும் அவரை தென்னிந்தியாவில் மோடியின் இமேஜ் பில்டராக ஆக்கிட வேண்டும் என்ற திட்டம் பாஜகவில் இருந்து தீட்டப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே ரஜினியை வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்துக்காக மீண்டும் டெல்லிக்கு அழைத்திருக்கிறார் மோடி. ’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
