பிரதமர் மோடி ரத்தம் தோய்ந்த குற்றவாளியை கட்டி அணைத்திருக்கிறார் என்று புதினை குறிப்பிட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
கடந்த 2022 பிப்ரவரி முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது.
இதில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அங்கு பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு வருடங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில் உக்கரைனில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று (ஜூலை 8) ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். 190 பேர் படுகாயங்களுடன் கிவி, டினிப்ரோ ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏவுகணைகள் தாக்கிய சில பகுதிகளில், மீட்பு நடவடிக்கைகள் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்துள்ளன. இன்னும் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக உக்ரைன் அரசு கூறுகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குல் நடத்திய அதே நாளில் இந்திய பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.
மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததும், அவரை மோடி கட்டியணத்து அன்பு காட்டியதும், இரவு உணவின் போது இருவரும் கலந்துரையாடியதும் உலக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “புற்றுநோயாளிகளை குறிவைத்து உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக ரத்தம் தோய்ந்த குற்றவாளியை (பிளடி கிரிமினல்) மாஸ்கோவில் கட்டிப்பிடித்ததைப் பார்க்கும் போது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே நேற்றிரவு நடந்த விருந்தின் போது, “போர்க்களத்தில் எதற்கும் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மட்டுமே முன்னோக்கி செல்ல முடியும்” என்று புதினிடம் மோடி கூறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க உத்தரவிட முடியாது : ஐகோர்ட்டு!
DGD vs SLST: அஸ்வினுக்கு அதிர்ச்சி அளித்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி!