திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று தைப்பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கலை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், மனித வாழ்க்கைக்கான அறநெறிகளைப் போதிக்கும் திருக்குறள் எழுதிய ஐயன் வள்ளுவனை நினைவுகூரும் வகையில் இன்று (ஜனவரி 16) திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
