பிரதமர் மோடியால் முதல்வர் ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரங்கள் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி துறையூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், “இயற்கையிலேயே காலம் தொட்டு தமிழ்நாட்டு மக்களோடு என்னுடைய உறவு மேம்பட்டிருக்கிறது, வளர்ந்திருக்கிறது. இதைப் பற்றி நான் அதிகம் சிந்தித்ததுண்டு. எதனால் என் இதயத்தில் தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு தனி இடம் இருக்கிறது. அது மக்கள் மீது மட்டுமல்ல, தமிழ் மொழி மீதும் எனக்கு அதிக அன்பு இருக்கிறது.
நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து வரவில்லை. ஆனால் ஏன் என்று தெரியவில்லை, நான் இந்தத் தமிழ் மண்ணோடு உணர்வுப்பூர்வமாக ஒன்றி இருக்கிறேன். எப்போதெல்லாம் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-ம் தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தைத் தாக்குகிறார்களோ, அப்போதெல்லாம் நான் என்னை ஒரு தமிழனாகவே உணர்கிறேன்.
அவர்கள் இப்படிச் செய்யும்போது நான் என் மனதில் நினைப்பேன், இந்தத் தமிழ் மண்ணின் மீதும், மக்கள் மீதும், கலாச்சாரத்தின் மீதும் தாக்குதல் நடத்த இவர்களுக்கு என்ன தைரியம் என்று நினைப்பேன்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஒரு புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்தார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்கிறோம் என்றார்கள். பெண்களுக்கான மசோதாவை அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டார்கள். ஆனால் அந்த மசோதாவிற்கு பின்னால் அவர்கள் ‘டிலிமிடேஷன்’ என்பதை ஒளித்து வைத்திருந்தார்கள்.
அவர்களது நோக்கம் என்னவென்றால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்பதுதான்.
தென்மாநிலங்களின் குரலை நசுக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். அந்தத் திட்டத்தை நேற்றைய தினம் நாம் முறியடித்தோம்.
இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்வது என்னவென்றால், ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒரு தொகுப்பு’. அதன் அர்த்தம், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான குரல் இருக்க வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு மாநிலமும் தன் மொழியை, தன் கலாச்சாரத்தைப் பாதுகாக்க உரிமை உண்டு. ஆனால் பிரதமர் ‘ஒரே நாடு, ஒரே தலைமை, ஒரே மொழி, ஒரே மதம்’ என்று சொல்லும்போது, அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே தாக்குகிறார்.
பழைய காலங்களில் ராணுவத்தைக் கொண்டு போர்கள் நடத்தப்பட்டன. பாஜகவும் இப்போது ஒரு போரைத் தான் தொடுக்கிறது, ஆனால் ராணுவம் இல்லாமல் செய்கிறது. அவர்கள் தமிழ் மொழியை, வரலாற்றை, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்நாளில் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது. பாஜக மக்களை புறக்கணிக்கிறது.
பாஜகவுக்கு தேவையெல்லாம் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள்வதற்கு வசதியாக ஒரு கூட்டாளி. பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதுபோல அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியின் உத்தரவுகளைக் கேட்டுச் செயல்படும் ஒரு பொம்மை முதலமைச்சர் தான் அவர்களுக்குத் தேவை.

ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் கொள்கைகளை சமரசம் செய்யமாட்டார் என பாஜகவுக்கு தெரியும். அவரை பணியவைக்க முடியாது என்று பிரதமர் மோடிக்கு தெரியும்.
தமிழ்நாட்டு மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-ம் அடிப்படையிலேயே தமிழினத்திற்கு எதிரானவர்கள். பாராளுமன்றத்தில் உங்கள் குரலைக் குறைக்க நினைத்த அவர்களின் திட்டத்தை நாங்கள் தவிடுபொடியாக்கி இருக்கிறோம்.
தமிழ்நாடு என்பது சமூக நீதி என்றால் என்ன என்பதை இந்தத் தேசத்திற்கே காட்டியிருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு என்றால் என்ன என்பதை உலகுக்குக் காட்டியிருக்கிறது. அதற்காக நான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பாஜக அதிமுகவை முற்றிலுமாக அழித்துவிட்டது. இப்போது அதிமுக என்ற ஒன்றே இல்லை. அது நரேந்திர மோடியாலும் அமித் ஷாவாலும் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு வெற்றிடம். அதிமுக இப்போது வெறும் முகமூடிதான், பாஜகவின் முகத்தை மறைக்கும் முகமூடி.
எனவே, நீங்கள் காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தர வேண்டும். பெரியாரின் கொள்கைகளையும், சமூக நீதியையும் பாதுகாக்க இந்தத் தேர்தல் ஒரு முக்கியமான போர். நீங்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, ராகுல் காந்தி எப்போதும் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க உங்களுடன் இருப்பார்” என்று கூறினார்.









