“பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
“மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. கல்விக்கு இணையாக விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஆர். சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பான விசாரணையின்போது, ‘பள்ளிகளில் விளையாட்டு மைதானம் மட்டுமல்லாமல், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 24) சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘சென்னை மாவட்டத்தில் மொத்தம் 1,434 பள்ளிகள் உள்ளன. அதில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை.
அந்த பள்ளி மாணவர்கள், அருகே உள்ள பொது விளையாட்டு மைதானங்களை பயன்படுத்துகின்றனர்.
அதேபோல, 1,434 பள்ளிகளில் கழிவறை வசதிகள் இருந்தாலும், அதில் 21 பள்ளிக்கூடத்தில் குடிநீர் வசதி இல்லை. 290 பள்ளிகளில் கழிவறையில் குப்பைத்தொட்டி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், இதுபோல மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், விளையாட்டு மைதானங்கள் குறித்தும் அடுத்த வாரம் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில அரசு பிளீடர் முத்துக்குமாருக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்தான் “பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி இன்று (ஆகஸ்ட் 25) வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “சென்னையில் மொத்தமுள்ள 1434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என்றும்,
290 பள்ளிகளில் கழிப்பறையில் உரிய வசதி இல்லை மற்றும் 21 பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்பது உள்ளிட்ட பல விவரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதுநாள்வரை அப்பள்ளிகள் இயங்கியது எப்படி என்ற கேள்விகளை எழுப்புவதோடு, உடனடியாக இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
மைதானம் இல்லாத பள்ளிகள் அருகிலுள்ள மாநகராட்சி மைதானங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் நடைமுறை எந்த அளவு சாத்தியமானது என்பது கேள்விக்குறியே?
தலைநகரான சென்னையிலேயே இந்த அவலநிலை என்றால், பிற நகரங்களில், கிராமங்களில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
தமிழகமெங்கும் உள்ள அனைத்துப் பள்ளிகளின் அடிப்படை வசதி குறித்த நிலையினை அறிந்திட, சமூக ஆர்வலர்கள், சமூகநல இயக்கங்களை உள்ளடக்கிய குழுவினை அமைத்து எந்தெந்தப் பள்ளிகளில் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதை முழுமையாக ஆவணப்படுத்தி தீர்த்து வைக்கப்படவேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா?” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
