பண்டிகை நாட்களில் போட்டித் தேர்வுகள்: கமல் கண்டனம்!

Published On:

| By Balaji

பண்டிகை நாட்களில் போட்டித் தேர்வுகளை நடத்தக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதன்மை தேர்வு ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, நேற்றும், இன்றும் தேர்வுகள் நடந்தன.

ADVERTISEMENT

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உழவுத் தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் இயற்கையையும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தனித்த அடையாளமான இந்தப்பண்டிகை நாட்களில் அரசுத் தேர்வுகள் நடத்துப்படுவது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படும். தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான பண்டிகை என்பதால், பணி நிமித்தமாக வெளி ஊர்களில் வசிப்பவர்கள் எல்லோரும் சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் சொந்தங்களுடன் பெருமகிழ்வுடன் இந்த விழாவைக் கொண்டாடுவார்கள். உறவுகளும் உணர்வுகளும் வலுப்படும் இந்த நாட்களில் தேர்வு நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாட்டில் கைவைக்கும் செயலாகும். அத்துடன், ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட்களிலும் தேர்வு இருக்கிறது. எனவே தேர்வர்களின் நலன் பாதுகாப்பினை மத்திய அரசு கருத்தில் கொண்டு தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,தேதிகளில் நடத்தப்பட இருந்த அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்ததை அடுத்து தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழைக் கொண்டாடுவதாக நாடகம் இயற்றும் மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் பொருட்படுத்துவதே கிடையாது. மத்திய, மாநில அரசுகள் போட்டித் தேர்வுகள் தேதி நிர்ணயம் செய்யும்போது, விழாக் காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.மத்திய அரசு தேர்வர்களின் பாதுகாப்பினை கணக்கில் கொண்டு யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share