நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த எம்.எம்.அப்துல்லாவின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘வாழ்த்து செய்தி’ திமுகவினரிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
திமுகவின் எம்.எம். அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் 6 பேர் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து மாநிலங்களவையில் தமிழக எம்பிக்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக கூட்டணியில் இருந்து எம்பியான வைகோ, திமுகவின் சண்முகம், வில்சன், அப்துல்லா ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இதில் திமுகவின் எம்.எம்.அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து பேசுபொருளாகி இருக்கிறது.

அந்த வாழ்த்துச் செய்தியில், ” மூத்தோர் அவையில் கழகத்தின் இளங்குருத்து! மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் எம்.எம்.அப்துல்லா தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு திமுக தலைமையிடம் கேட்கவில்லை; 2026 தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த பின்னணியில் ‘மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் பணிகள் காத்திருக்கின்றன’ என அப்துல்லாவுக்கான வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது, சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அப்துல்லா போட்டியிடுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது என்கின்றனர் திமுகவினர்.
