அவர் முதல்வராக இருக்கும்போது, வெளிநாட்டு பயணங்கள் எப்படி இருந்ததோ அப்படி தான் எனது பயணங்களும் இருக்கும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று முதல் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்காக திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியினரின் உற்சாக வாழ்த்துகளோடு இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஐரோப்பிய பயணம் மற்றும் தொழில் முதலீடுகள் குறித்து ஸ்டாலின் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
அப்போது அவர், “எனது வெளிநாட்டு பயணங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவரை பொறுத்தவரை, அவர் முதல்வராக இருக்கும்போது, அவரது வெளிநாட்டு பயணங்கள் எப்படி இருந்ததோ அப்படி தான் இருக்கும் என நினைக்கிறார். ஆனால் நான் கையெழுத்திடும் ஒப்பந்தங்கள் பல செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
தேர்தல் ஆணையம் உட்பட யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. ஏன், பீகார் மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. அங்கேயும் மக்களை எழுச்சி பெற வைக்க, தேர்தல் ஆணையம் உதவியிருக்கிறது என்பதே உண்மை.
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ… இல்லையோ திமுகவை நோக்கி புதிய வாக்காளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல் கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும், திமுக கூட்டணி தான் அமோக வெற்றிபெறும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் பற்றி பேச மறுப்பு தெரிவித்த தெரிவித்த ஸ்டாலின், ஐரோப்பிய தொழில் முதலீடுகள் குறித்து நான் அதிகம் பேசவில்லை. பேச்சைக் குறைத்து செயலில் காட்டுகிறேன்” எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டார்.
