ஆளுநரின் செயலுக்கான பதிலை நாளை (ஜூன் 30) முதலமைச்சர் கூறுவார். ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தற்போது அமலாக்கத்துறை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இந்நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.
மேலும் அவர் மீது நிலுவையில் இருக்கும் ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகளை சுட்டிக்காட்டி தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநரின் இந்த முடிவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “ஆளுநரின் செயலுக்கான பதிலை நாளை முதலமைச்சர் கூறுவார். ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை.
ஆளுநர் மாநில அமைச்சரைவையின் அறிவுரைப்படி செயல்பட வேண்டியவர். ஒருவரை அமைச்சரவையில் வைக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்ற அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே உள்ளது. அதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் இதுபோன்று முடிவெடுத்தால் ஆட்சி நடத்த முடியுமா? இது ஜனநாயக நாடா? ஆளுநரின் சர்வதிகாரா நாடா?
நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா.. இல்லையா என்பதை மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
