”சொந்த நாட்டிலேயே அரசியல் அதிகாரம் இழப்போம்” : ஸ்டாலின் எச்சரிக்கை! – முழு பேச்சு!

Published On:

| By christopher

mkstalin warnings on delimitation at JAC meeting

தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதித்தால், நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளதாக கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் எச்சரித்துள்ளார். mkstalin warnings on delimitation at JAC meeting

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சி பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது.

அதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரையாற்றினார்.

ஓரணியில் திரண்டிருக்கிறோம்!

அவர் பேசியதாவது, ”இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இருக்கும் – ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் அழைப்பினை ஏற்று இத்தனை இயக்கங்கள் கட்சிகள் வந்திருப்பது இக்கூட்டத்தின் மாபெரும் சிறப்பு.

பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளீர்கள்.

இந்திய ஜனநாயகத்தைக் காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கிறோம் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதாக உங்களது வருகை அமைந்திருக்கிறது. இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றைக் காக்க நாம் ஒன்றுகூடி இருக்கிறோம். இந்த முன்னெடுப்பில் இணைந்துள்ள அத்தனை பேருக்கும் நன்றி!

பல்வேறு மாநிலங்களில் இருந்து நாம் ஒன்றுகூடி இருக்கிறோம். நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டது! பல்வேறு மொழிகள், இனங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் உடைகள் உணவுகள், பழக்க வழக்கங்கள் கொண்டதுதான் இந்தியா.

இத்தகைய மாநிலங்கள் சுயாட்சித் தன்மையுடன் செயல்பட்டால்தான், இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும். சிறந்த வளர்ச்சியை அடைய முடியும்.

அனைத்துத் தரப்பு மக்களும் போராடியதால்தான், நமது நாட்டிற்கு விடுதலை கிடைத்தது. இதனை உணர்ந்துதான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்த மேதைகள், இந்தியாவைக் கூட்டாட்சி கொண்ட ஒன்றியமாக கட்டமைத்தார்கள்.

பல்வேறு காலக்கட்டங்களில் இந்த கூட்டாட்சித் தன்மைக்கு சோதனை வந்தாலும் அதனை ஜனநாயக அமைப்புகள் இயக்கங்கள் தடுத்து வந்துள்ளன. அத்தகைய சோதனையும் ஆபத்தும்தான் இப்போதும் வந்துள்ளது. இதனை உணர்ந்துதான் நாம் அனைவரும் கூடியிருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில், இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றில் மிகமிக முக்கியமான நாளாக இந்த நாள் அமையப் போகிறது. தொகுதி மறுசீரமைப்பை பற்றி நான் உங்களுக்கு அதிகமாக விளக்க வேண்டிய அவசியமில்லை.

எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல! mkstalin warnings on delimitation at JAC meeting

வரவிருக்கின்ற அல்லது எதிர்காலத்தில் நடைபெறுகின்ற மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது, நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது.

மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் நமது பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும். எனவேதான் இதனை நாம் கடுமையாக – ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

“தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது” என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், மக்கள்தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களைத் தண்டிப்பதாக இந்த நடவடிக்கை இருக்கப் போகிறது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களைச் சொல்வதற்கான வலிமை குறைகிறது.

இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமையை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும்.

இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல – இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது.

சொந்த நாட்டில் அதிகாரம் இழக்கும் அபாயம்!

பிரதிநிதித்துவம் குறைந்தால், நமது மாநிலங்கள் நமக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு கூட போராட வேண்டிய நிலை வரும். நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களைப் பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளைச் சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது பண்பாடு, அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூகநீதி பாதிக்கப்படும். குறிப்பாக பட்டியலின, பழங்குடி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதித்தாலோ அல்லது நமது மாநில பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதித்தாலோ, நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது. எனவேதான், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தைச் சாதாரணமாகக் கருதக் கூடாது என்று சொல்கிறேன்.

இன்னொன்றையும் நான் தெளிவாகச் சொல்கிறேன் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடவடிக்கையானது, நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.

இந்தப் போராட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; இந்தப் போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இதனை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நான் கூட்டினேன். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழ்நாடு 8 இடங்களை இழக்கும் என்பதை நான் தெளிவுபடுத்தினேன். நாடாளுமன்றத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாடு 12 இடங்களை இழக்க நேரிடும். இது நமது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு நேரடி அடியாகும் என்று சொன்னேன்.

அமித் ஷா – மோடி பேச்சில் முரண்பாடு! mkstalin warnings on delimitation at JAC meeting

மறுநாளே, கோயம்புத்தூரில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து உரையாற்றியபோது, “தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்கள் விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை இழக்காது” என்று கூறினார். உள்துறை அமைச்சரின் விளக்கம் தெளிவாக இல்லை, குழப்பமாகத்தான் இருந்தது.

2023-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் பரப்புரை செய்ய வந்த பிரதமர் மோடி, “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி மக்கள்தொகை அடிப்படையில் சமூகங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சொல்கிறது. அடுத்ததாக தொகுதி மறுவரையறை நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சொல்வதைப் போல மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும். தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா?” என்று கேட்டார் பிரதமர்.

இதனடிப்படையில் பார்த்தால், தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை உணரலாம். எப்போதும் மாநிலங்களை, மாநில உரிமைகளைப் பறிக்கிற கட்சியாக பா.ஜ.க. இருந்துள்ளது. அவர்கள் தங்களது உள்நோக்கத்தை தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தில் செய்ய நினைக்கிறார்கள். இதனை எந்த மாநிலமும் அனுமதிக்கக் கூடாது. இந்த அச்சுறுத்தலை உணர்ந்து, முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதேபோன்ற ஒற்றுமையை இந்த அரங்கிலுள்ள அனைத்து மாநிலங்களும் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வல்லுநர் குழு அமைக்க வேண்டும்! mkstalin warnings on delimitation at JAC meeting

இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த உங்கள் மதிப்புமிக்க பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் குழுவுக்கு ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ என்று பெயரிட நான் முன்மொழிகிறேன்.

நாம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவானவர்கள் என்பதை இந்தப் பெயரே சொல்லும்!

ஒரு நாள் நாம் கூடி ஆலோசித்து, தீர்மானம் நிறைவேற்றுவதில் மட்டுமே இந்தப் போராட்டம் முடிவடைந்துவிடாது. உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. ஒன்றிய அரசை வலியுறுத்துவது ஒருபக்கமும் இன்னொரு பக்கம் இதுகுறித்து மக்களிடம் விளக்கிட- மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த கூட்டு நடவடிக்கைக் குழு மிக அவசியம் என்றே கருதுகிறேன்.

நமது அரசியல்ரீதியான எதிர்ப்பைச் சட்டபூர்வமாக எப்படி நடத்துவது என்பது குறித்து அனைவரும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுப்பதற்காக வல்லுநர்களின் குழுவை அமைக்க நான் முன்மொழிகிறேன். ஒட்டுமொத்த முன்மொழிவு குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். எந்தச் சூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது; குறையவிடக் கூடாது என்ற உறுதியோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம்” என்று ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share