தென்காசி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணத்திற்கான தேதி இன்று (அக்டோபர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் சென்னை முதல் தென்காசி வரை என பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.
இதற்கிடையே வரும் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், தென்காசிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கனமழை எச்சரிக்கையால் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் வசதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையாது எனவும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையைக் கடக்கும் என்பதால் அதீத கனமழைக்கான வாய்ப்புகள் குறைவு என வானிலை மையம் தெரிவித்தது.
இதனையடுத்து ரத்தான முதல்வர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் தென்காசி பயணத்திற்கான தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த பயணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் ஸ்டாலின், முக்கிய நிகழ்வாக 30ம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
