ADVERTISEMENT

4வது நாளாக சசிகாந்த் உண்ணாவிரதம் : போராட்டத்தை கைவிட வலியுறுத்திய ஸ்டாலின்

Published On:

| By christopher

mkStalin urges Sasikanth to calloff hunger strike

சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கனிமொழி எம்.பி இன்று (செப்டம்பர் 1) தெரிவித்தார்.

சமக்ர சிக்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT

இதனை கண்டித்தும், மத்திய அரசு நிதி விடுவிக்க கோரியும் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

2வது நாளே அதிக ரத்த அழுத்தம் காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

எனினும் ’மத்திய அரசு நிதியை விடுவிக்கும் வரை எனது போராட்டம் ஓயாது’ என்று கூறி இன்று 4வது நாளாக சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது போராட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அதே போன்று தமிழகத்தில் காங்கிரஸ், திமுக விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல முக்கிய கட்சியின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரம் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகாந்தை, திமுக எம்பி கனிமொழி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய எஸ்.எஸ்.ஏ நிதி குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடியை சந்திக்கும்போதெல்லாம் முறையிட்டு வருகிறார். அதனை தருவதாக பிரதமர் மோடியும் உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

சசிகாந்த் செந்தில் உணர்வை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சசிகாந்த் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அவரை சந்தித்து இதனை தெரியப்படுத்தினேன்.

நமது உரிமைகளை பெறுவதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன. அவரது சேவை இந்த நாட்டிற்கு தேவை. எனவே அவர் உடல் நலனை வருத்திக் கொள்ள வேண்டாம். திமுகவும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து போராடி கல்வி நிதியை பெறுவோம்” எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share