”தேர்தல் பத்திர ஊழல் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது” : ஸ்டாலின்

Published On:

| By christopher

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

குறிப்பாக, சமீபத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், திமுக முன்னாள் நிர்வாகி என்பதால் அதனை வைத்து அடுத்தடுத்து பல்வேறு குற்றசாட்டுகள் திமுக அரசு மீது வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) அளித்த பேட்டியில் இதுதொடர்பாக பதில் அளித்துள்ளார்.

பாஜக, அதிமுக – போதைப்பொருள் பரவலுக்கு காரணம்!

அதில், “கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா ஊழல் வழக்கில் தனது அமைச்சரும் டிஜிபியும் நேரடியாக குற்றம்சாட்டப்படும் வகையில் தான் பழனிசாமி ஆட்சியை நடத்தினார். அவரது ஆட்சியில்தான் மற்ற போதைப் பொருட்களுடன் கஞ்சா புழக்கத்தில் இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் பதிவான கஞ்சா மற்றும் ஹெராயின் வழக்குகளின் தன்மையை ஒட்டுமொத்த தேசமும் அறியும்.

போதைப்பொருளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நடத்திய மனித சங்கிலி போராட்டம் என்பது தேர்தல் ஸ்டண்ட்.

பா.ஜ.க ஆளும் குஜராத், நாட்டின் போதைப்பொருள் தலைநகராக திகழ்வதாக பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் போதைப்பொருள் பரவலுக்கு மட்டுமே பங்களித்தன.

ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டம் தன் போக்கை எடுத்துள்ளது. திமுக மீது மக்கள் அவதூறு கூறினால் சட்டத்தின் வழியை நாடுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எதையும் சட்டப்படி முறியடிப்போம்!

மேலும் அவர், “திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அமைச்சர் பொன்முடி மீதான  தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செந்தில் பாலாஜி அரசியல் ரீதியாக குறிவைக்கப்படுகிறார் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை மிரட்டும் மத்திய அரசின் முகவராக அமலாக்கத்துறை மாறியிருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியின் புகழையும், மக்களின் நன்மதிப்பையும் இழிவுபடுத்தும் எந்த முயற்சியையும் நாங்கள் சட்டப்படி முறியடிப்போம்.

மோடியின் பொய் குற்றச்சாட்டு!

பொதுவாக, மற்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திமுகவை விமர்சிக்கும்போது பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். ஆனால், பிரதமர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து டாக்டர் மன்மோகன் சிங் வரை தேசத்தின் தலைவர்கள் அப்படித்தான் இருந்தனர்.

ஆனால் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை இதில் விதிவிலக்கு வாட்ஸ்அப் மூலம் வதந்திகளை பரப்புவதை பாஜக நிர்வாகிகள் சிலர் முழு நேர வேலையாக செய்து வருகின்றனர். இதுதொடர்பாக நாம் கேள்வி கேட்டால் அதற்கு அவர்கள் பதில் சொல்வதில்லை.

சமீபத்தில் கூட  மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு கிடப்பில் போடுவதாக பிரதமர்  பொய் குற்றச்சாட்டை சுமத்தினார். எந்த திட்டம் அவ்வாறு கிடப்பில் போடப்பட்டது என்பதற்கு இதுவரை பிரதமர் மற்றும் பாஜக தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டமாக இருந்தாலும் சரி, ஜல் ஜீவன் திட்டமாக இருந்தாலும் சரி, எனது தலைமையிலான அரசு  மேம்பட்ட பங்களிப்புடன் அவற்றை சிறப்பாகச் செயல்படுத்தி மத்திய விருதுகளையும் வென்றுள்ளது. பிரதமர் முதல் சாதாரண பாஜக நிர்வாகிகள் வரை அனைவருக்கும் இது தெரியும்.

பாஜக வேட்பாளர் பட்டியலில் வாரிசுகள்!

அதனால் தான் , திமுகவை வாரிசு அரசியல் கட்சி என்றும் ஊழல்வாதி கட்சி என்று பொதுவாக குற்றஞ்சாட்டி திசை திருப்பும் தந்திரங்களில் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் நான் கலைஞரின் மகன். நான் அவருடைய சித்தாந்த வாரிசு. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களவைக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ள வாரிசுகளுக்கு, பிரதமரிடமும் அவரது கட்சி நிர்வாகிகளிடமும் என்ன பதில் இருக்கிறது?

சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிக்கொண்டு வந்த ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடுகளும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதியும் பாஜகவின் உண்மை முகமும் அம்பலமாகியுள்ளது. அதற்கு அவர்களின் பதில் என்ன?

நீதிமன்றத்தை ஏமாற்றும் முயற்சி அம்பலம்!

சட்டரீதியாக ஊழலில் ஈடுபடுவது பாஜகவின் வழக்கம். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு, நீதித்துறையின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மக்களின் கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம். ஆனால் அதன் தீர்ப்பை புறக்கணிக்க முயற்சிப்பதும், அதன் உத்தரவுகளை அமல்படுத்துவதில் தாமதம் செய்வதும் அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல்கள்.

சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இங்குள்ள ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக வாக்குறுதி அளித்த பாஜக, ஒரு பைசா கூட மீட்கவில்லை.

மாறாக, பாஜக ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பல நிறுவனங்களிடமிருந்து பல ஆயிரம் கோடிகளை வசூலித்தது, நீதிமன்றத்தை கூட ஏமாற்ற முயற்சித்தது என்பது தற்போது தேர்தல் பத்திரத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

திமுகவும் தேர்தல் நிதி வாங்கியுள்ளது… ஆனால்!

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், “தேர்தல் பத்திரங்களின் பயனாளிகளில் திமுகவும் இருக்கிறது. இதனை  குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர்கள் திமுக அரசை குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அதற்கு உங்களது பதில் என்ன?

அதற்கு அவர், “திமுக தனது முதல் முதல் தேர்தலிலிருந்தே ’தேர்தல் நிதி’ திரட்டி வருகிறது. 1967 தேர்தலின் போது அண்ணா தேர்தல் நிதி இலக்காக ரூ.10 லட்சம் நிர்ணயித்தார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கலைஞர் ரூ.11 லட்சம் நிதி வசூலித்து கொடுத்தார். ஆனால் வசூலித்த தேர்தல் நிதியை முறையாக தணிக்கை செய்வது திமுகவின் வழக்கம். அதே வெளிப்படையான முறையில் தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் தற்போது நிதி சேகரித்துள்ளோம்.

தங்கள் மீதான விமர்சனத்தை திசை திருப்ப, திமுக மற்றும் பிற கட்சிகள் மீது பழி சுமத்தி வரும் பாஜக, தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்ட யாருக்கு, எப்படியெல்லாம் அழுத்தம் கொடுத்தது என்பது ஆய்வுக்குரியது. தேர்தல் பத்திர வழக்கில் பாஜக கையும் களவுமாக பிடிபட்டுள்ளது ” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திமுக வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்கும்? : ஸ்டாலின் பதில்!

எலக்‌ஷன் ஃபிளாஷ்: ஒரு நாளைக்கு இரு தொகுதிகள்- ஸ்டாலின் பிரச்சாரத் திட்டம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share