மாநிலங்களவை எம்பியாக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவி காலம் இன்றுடன் (ஏப்ரல் 3) ஓய்வு பெறுகிறார்.
கடந்த 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்தும் மாநிலங்களவை எம்.பியாக மன்மோகன் சிங்கின் பதவி வகித்தார். அவரது 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதனையடுத்து பல்வேறு கட்சி தலைவர்களும் மன்மோகன் சிங்கின் ஓய்வுக்கு தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்களது தலைமைத்துவம் எங்களுக்கு உத்வேகம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நாட்டுக்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, அறிவாற்றல் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய கலவையான செயல்பாடுகள் மூலமாக கட்சிகள் கடந்து மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள்.
நான் உட்பட பலருக்கும் உங்களது தலைமைத்துவம் உத்வேகமாக அமைந்துள்ளது.
இந்திய ஒன்றியத்துக்கும், மக்களுக்கும் மகத்தான பங்களிப்பு செய்த பெருமிதத்துடன் உங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எதிர்க்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என திமுக சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன்.
உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகத் தலைவர்களே உற்று நோக்கினார்கள்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றிய நீங்கள் இன்று மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுவதால், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது. உங்களை விட அதிக அர்ப்பணிப்புடனும் அதிக பக்தியுடனும் இந்திய தேசத்திற்கு சேவை செய்ததாக மிகச் சிலரையே சொல்ல முடியும். தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் உங்களைப் போல் மிகச் சிலரே சாதித்திருக்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில், உங்கள் அமைச்சரவையில் அங்கம் வகித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். கடந்த 10 ஆண்டுகளாக, மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, நீங்கள் எப்போதும் ஞானத்தின் ஊற்றுமூலமாகவும், அனைவரின் கருத்துகளையும் மதிப்பவராகவும் இருந்தீர்கள். கடந்த சில ஆண்டுகளாக, தனிப்பட்ட அசௌகரியங்கள் இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் நாட்டு மக்களுக்கு தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று உழைத்தீர்கள். இதற்கு நானும் கட்சியும் எப்போதும் நன்றியுடன் இருப்போம்.
தேசத்தின் வளர்ச்சியில் ஏழைகளும் பங்கெடுத்து வறுமையில் இருந்து மீள முடியும் என்பதை காட்டியவர் நீங்கள். உங்கள் கொள்கைகளால், நீங்கள் பிரதமராக இருந்தபோது, உலகிலேயே அதிகளவில் 27 கோடி ஏழை மக்களை இந்தியாவால் வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.
உங்கள் அரசாங்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட MGNREGA திட்டம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு நெருக்கடி காலங்களில் தொடர்ந்து நிவாரணம் அளிக்கிறது. தேசமும் குறிப்பாக கிராமப்புற ஏழைகளும் இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் வாழ்க்கையை சம்பாதிக்கவும் சுயமரியாதையுடன் வாழவும் உங்களை எப்போதும் நினைவில் கொள்கிறார்கள்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் தேசபக்தி மற்றும் அதன் தியாக உணர்வு ஆகியவை உங்களால் சிறப்பாக நிரூபிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் இந்தியாவுக்கு உரிய இடத்தைப் பிடிக்க நீங்கள் வழிவகுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் அது. உலகளாவிய நிதி நெருக்கடியின் போது அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் பிற உலகத் தலைவர்கள் உங்கள் மீது கொண்ட மரியாதை மேலும் அதிகரித்தது. “இந்தியப் பிரதமர் எப்போது பேசினாலும் உலகமே கேட்கிறது” என்று உங்களைப் பற்றி அதிபர் ஒபாமா குறிப்பிட்டது நினைவிருக்கிறது. தேசத்திற்கு நீங்கள் செய்த பல பங்களிப்புகளில் நான் குறிப்பிடும் சில நிகழ்வுகள் மட்டுமே.
நீங்கள் எப்போதும் ஒரு ஹீரோ தான்!
தற்போதைய அரசாங்கம் எந்தச் சிறிய சீர்திருத்தங்களைச் செய்தாலும், உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடங்கப்பட்ட வேலைகளில் அதன் விதைகள் உள்ளன. ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்குகள், ஆதார் போன்றவை அதற்கு எடுத்துக்காட்டு.
பெட்ரோல், டீசல் விலையில் நீங்கள் வைத்திருந்த கட்டுப்பாட்டை தற்போதைய அரசு முழுமையாக இழந்து நிற்பது தெரிகிறது. தற்போதைய அரசாங்கம் சாமானியர்கள் மீது அதிக வரிகளை விதிக்கிறது. அரசாங்கம் பின்வாங்கிய மற்றொரு பகுதி, அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மை மற்றும் அரசாங்கத்திடம் இருந்து வாழ்வாதாரத்தை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிரதமர் பதவிக்கு நீங்கள் கொண்டு வந்த அமைதியான ஆனால் வலுவான கண்ணியத்தை தேசம் தற்போது இழந்து நிற்கிறது. உங்கள் ஞானத்தையும் அனுபவத்தையும் பாராளுமன்றம் இப்போது தவறவிடும். உங்கள் கண்ணியமான, அளவான, மென்மையான, ஆனால் அரசியல்வாதிகள் போன்ற வார்த்தைகள் தற்போதைய அரசியலைக் குறிக்கும் பொய்களால் நிரப்பப்பட்ட உரத்த குரல்களுக்கு மாறாக உள்ளன.
பணமதிப்பு நீக்கம் குறித்த உங்கள் பேச்சு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, அதனை “மேலாண்மை தோல்விக்கான நினைவு சின்னம்” மற்றும் “ஒரு சட்டப்பூர்வமாக்கப்பட்ட கொள்ளை” என்று நீங்கள் கூறினீர்கள். அது கொடூரமான உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல் குறைகளை சுட்டிக்காட்ட முடியும் என்று காட்டியிருக்கிறீர்கள். தற்போதைய அரசாங்கத்தின் பொய்களை தேசமும் மக்களும் விரைவில் கண்டுகொள்வார்கள். சூரியனையும் சந்திரனையும் எப்படி மறைக்க முடியாதோ அதுபோல உண்மையையும் மறைக்க முடியாது. உங்கள் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள்.
நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் நீங்கள் எப்போதும் ஒரு ஹீரோவாகவும், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒரு தலைவராகவும் வழிகாட்டியாகவும் நீங்கள் என்றும் இருப்பீர்கள்” என்று மல்லிகார்ஜூன் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் புத்திசாலித்தனம் தான் பெங்களூரு ஐ.டி!
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3 தசாப்தங்களாக பதவி வகித்து மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுவதால், ஒரு புகழ்பெற்ற வாழ்க்கை உண்மையிலேயே முடிவுக்கு வருகிறது.
90களில் நமது பொருளாதாரக் கொள்கைகளின் சிற்பியாக இருந்து, பிரதமராக நாட்டுக்கு சேவையாற்றியது வரை, கருணை, அரசாட்சி மற்றும் புத்திசாலித்தனத்தை மறுவரையறை செய்தவர் மன்மோகன் சிங். பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் தன் வாழ்வில் நேர்மையுடன் எதிர்கொண்டார். இது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று! அவரது பொருளாதார புத்திசாலித்தனம் பெங்களூரு தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தின் மையமாக மாற உதவியது.
தன்னலமின்றி மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் சிறந்த மரபு உருவாகிறது என்பதை மன்மோகன் சிங் நமக்கு வாழ்ந்து காட்டியதால், காங்கிரஸ் கட்சியிலும், ஒரு தேசமாக நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
33 ஆண்டுகளுக்கு பிறகு… முருகன் உள்பட மூவர் இலங்கை சென்றனர்!
‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!