’பொங்கல் பரிசாக ரூ.30,000 கொடுக்க வேண்டும்’ : செல்லூர் ராஜூ தடாலடி!

Published On:

| By christopher

இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் முப்பதாயிரம் ரூபாய் திமுக அரசு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜனவரி 1) தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருவிழாவான பொங்கலையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் 3ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

எனினும் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 பணப்பரிசாக வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து பணப்பரிசு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்!

ADVERTISEMENT

அப்போது அவர், “ஒருங்கிணைந்த அதிமுக கூட்டணி நிறைவேறும். அதனை எடப்பாடி பார்த்துக்கொள்வார். கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சிமிகு ஆண்டாக அமையும்.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் பொங்கல் தொகுப்பை தொகையோடு ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி 2,500 ரூபாய் வழங்கியிருக்கிறார். ஆயிரம் ரூபாய் வழங்கினார். முழு கரும்பும் வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், பொங்கல் தொகுப்பில் 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அன்றைக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்பது இன்றைக்கு முப்பதாயிரம் ரூபாய் மதிப்புடையது.

உண்மையிலேயே மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த ஆட்சி நினைத்தால் முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் அப்போது ஐந்தாயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்கள் தற்போது ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கவில்லை.

கடந்த முறை எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தியதால்தான் ஆயிரம் ரூபாயும் கரும்பும் கொடுக்கப்பட்டது” என்றார்.

உதயநிதி தனது அப்பாவிடம் பேசி அறிவிக்க வேண்டும்!

மேலும் அவர், “தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின் போது அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டு துறையில் 2 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி அவருடைய ஆட்சியில் மூன்று சதவீதமாக உயர்த்தி வழங்கினார்.

தற்போது கபடி வீரர்களையும் இந்த இடஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் உயிரை பணயம் வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் அரசு காப்பீட்டு திட்டம் கொண்டு வர வேண்டும். இழப்பீடு தொகையையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு 50000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள். ஆகையால் விளையாட்டு வீரர்களுக்கு தாராளமாக நிதி உதவி செய்யலாம்.

இதற்காக விளையாட்டு துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையாரிடம் பேசி அனுமதி பெற்று இந்த ஆண்டு விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடையும் வரை வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என நினைக்கின்றேன்.

அப்படி அவர் அறிவிக்காவிட்டால் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மலர்ந்தவுடன், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையை கொடுப்பார்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் ராஜ்யசபா… புத்தாண்டில் வைகோ அளித்த பதில்: ஸ்டாலின் நிலை என்ன?

’உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்’ : ஸ்டாலின் மகிழ்ச்சி!

ஒரே ஆண்டில் 71 விக்கெட்டுகள் : கிரிக்கெட் ஆஸ்திரேலிய உத்தேச அணியின் கேப்டனாக பும்ரா தேர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share