ADVERTISEMENT

மேட்டூர் அணை திறப்பு: விவசாயிகளிடம் முதல்வர் வேண்டுகோள்!

Published On:

| By christopher

சேலம் மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுபயணமாக கடந்த 10ஆம் தேதி சென்ற முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளான இன்று (ஜூன் 12) காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடைமடை வரை காவிரி சென்றடைய வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சிக்கு வந்ததும் திட்டமிடப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 4.9 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

அதேபோன்று கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால், வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும் ஜூன் 12ஆம் தேதிக்கு பதிலாக, 19 நாட்களுக்கு முன்னதாக மே 24ஆம் தேதி திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கு முன்னதாகவே அனைத்து கால்வாய்களும் நீர்வளத்துறை சார்பில் ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டது. இதற்காக டெல்டா மாவட்ட விவசாயிகள் பலரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

mkstalin opened mettur dam

நெல் உற்பத்தியில் சாதனை!

தொடர்ந்து தமிழக அரசு அறிவித்த பல்வேறு வேளாண் திட்டங்களால் கடந்த ஆண்டில் குறுவை நெல் சாகுபடியானது கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 17.6 லட்சம் டன் உற்பத்தி செய்து சாதனை செய்யப்பட்டது.

நடப்பாண்டில் கோடையில் பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்ந்தது.

இந்நிலையில் இந்தாண்டு வழக்கம்போல மேட்டூர் அணையில் நீர் திறப்புக்காக கால்வாய் தூர்வார ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து தூர்வாரப்பட்ட இடங்களை சில நாட்களுக்கு முன்பு நானும், அமைச்சர்களும் தஞ்சாவூருக்கு சென்று நேரில் ஆய்வு செய்தோம்.

மேலும் குறுவை நெல்சாகுபடியை வெற்றிகரமாக பெறுவதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகளுடனும் கலந்துரையாடினோம்.

குறுவை சாகுபடி அதிகரிக்க வேண்டும்!

இந்நிலையில் டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை தொடர்ந்து 3வது ஆண்டாக உரிய நேரத்தில் இன்று திறந்து வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் பாசன வசதி பெறும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, இடுபொருள்களை தேவையான அளவு உபயோகித்து குறுவை நெல் உற்பத்தியை இந்தாண்டும் அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பறந்த அதிரடி உத்தரவு!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்

எழும்பூர் ரயில் நிலைய மரங்கள்: தெற்கு ரயில்வே விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share