”தாய் – தந்தையர்க்கு இணையாக பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்” – மு.க.முத்து உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Published On:

| By christopher

mkstalin last respect to his brother mk muthu

உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமான தனது சசோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். mkstalin last respect to his brother mk muthu

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கலைஞர் – பத்மாவதி தம்பதியினருக்கு 1948ஆம் ஆண்டு பிறந்த மு.க.முத்து, பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எனினும் தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அரசியலில் இருந்து விலகினார்.

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளாக அவரின் உடல்நிலை மோசமாகி வந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் மு.க.முத்துவின் உயிர் பிரிந்தது.

அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தனது சசோகரதர் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்த அண்ணன்!

மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் – தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.

தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர். தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து.

ADVERTISEMENT

நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு இரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து.

பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து. என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share