புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் நடந்த முதல் விழா.. ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Published On:

| By christopher

mkstalin joyed with the first program at valluvar kottam

”எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லாருக்கும் சமூகநீதி கிடைக்கக்கூடாது என நினைக்கும் வகுப்புவாதிகள் தான் திமுக அரசு மீது பாய்கிறார்கள்” என புதுக்கப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். mkstalin joyed with the first program at valluvar kottam

சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என வள்ளுவர் கோட்டத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன.

சமீபத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், புதுக்கப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 21) மாலை திறந்து வைத்தார்.

தொடர்ந்து உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதலமைச்சருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்ச்சி மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது.

அப்போது, முழு உருவ சிங்க சிலையை மு.க ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து விழாவில் ஸ்டாலின் பேசுகையில், “இன்று எனக்கு உணர்ச்சிப்பூர்வமான நாள். இந்த விழாவுக்காக மட்டுமல்ல. இந்த இடத்திற்காகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்த கலைஞர் உருவாக்கிய இந்த வள்ளுவர் கோட்டத்தில் எனக்கு நீங்கள் நடத்தும் இந்த பாராட்டு விழா மூலம் நான் பெருமைக் கொள்கிறேன்.

கலைஞர் திருக்குறள் மீது தீரா பற்றுக்கொண்டவர். அவர் அமைச்சராக இருந்தபோது திருக்குறளை அரசு பேருந்துகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இடம்பெறச் செய்தவர். 1971ல் முதலமைச்சராக ஆனதும் திருவள்ளுவர் ஆண்டை அரசு ஆணையாக அறிவித்தவர். இந்திய நாடு துவங்கும் குமரி முனையில் வள்ளுவருக்கு வானளாவ சிலை வைத்தவர். 1974ல் கலைஞர் இந்த வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது கலைஞரின் கனவு படைப்பு. அதனைத் தான் நாம் ரூ.80 கோடி அளவில் புதுப்பித்திருக்கிறோம்.

இது எல்லோருக்குமான ஆட்சி. எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லாருக்கும் சமூகநீதி கிடைக்கக்கூடாது என நினைக்கும் வகுப்புவாதிகள் தான் திமுக அரசு மீது பாய்கிறார்கள்.

நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பாராட்டுக்காக அல்ல. உங்கள் அன்புக்காக தான். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். உங்களுக்காக நான் இருக்கிறேன். நான் எப்போதும் உங்களில் ஒருவன். அரசியலுக்காக, தேர்தலுக்காக இதை சொல்லவில்லை. உள்ளார்ந்து சொல்கிறேன்” என ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share