முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளில் முதல் வேலையாக, 2025-26 கல்வி ஆண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை இன்று (மார்ச் 1) தொடங்கி வைத்துள்ளார். mkstalin first work on his 72 birthday
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பிறந்தநாள் விழா கொண்டாட்டம் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளன்று முதல் வேலையாக முன்னாள் முதல்வர்களான அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு நேரில் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்துவது வழக்கம்.

மாணவர் சேர்க்கை தொடங்கி வைப்பு! mkstalin first work on his 72 birthday
ஆனால் இந்தாண்டு முதல் வேலையாக இன்று காலை தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். பள்ளியில் சேர வந்த மாணவர்களுக்கு மாலையிட்டு வரவேற்பளித்த ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
அண்ணா, கலைஞர், பெரியாருக்கு மரியாதை! mkstalin first work on his 72 birthday
அதன்பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதே இடத்தில் தனது அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் தொண்டர்களுடன் இந்தி திணிப்புக்கு எதிராக உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் வாழ்த்து பெற்றார்.
அங்கிருந்து கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “நேற்றைய தினம் நடைபெற்ற எனது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நான் தெளிவாக கூறி இருக்கிறேன். மாநிலத்தில் சுயாட்சி வேண்டும், குறிப்பாக இன்று திணிக்கப்படக்கூடிய இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.
இருமொழிக் கொள்கையை தான் கொண்டு வரவேண்டும். அது தான் எனது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.