மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, நீங்கள் தான் நிறுத்தி விட்டு சென்றீர்கள் என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்த்தார். mkstalin eps debate on free laptop
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச் 17) தொடங்கியது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, ”எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் 4 வயது குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வந்தனர். ஆனால் திமுகவினரால் கொண்டு வரப்படும் மகளிர் உரிமைத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் வாக்களிக்கும் பெண்களுக்காக உள்ளது. எனவே திமுக கொண்டு வரும் சமூக திட்டங்கள் சமூக மாற்றத்திற்காகவா ? அல்லது வாக்கு வங்கிக்காகவா ? என்று கேள்வி எழுப்பினார்.
திமுக திட்டங்கள் யாருக்கு? mkstalin eps debate on free laptop
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ”நாங்கள் கொண்டுவந்த பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அந்த திட்டம் வாக்கு வங்கிக்காக கொண்டு வந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அது எல்லாம் வாக்கு வங்கிக்காகவா? இலங்கைத் தமிழர்களுக்கு திட்டங்கள் எதுவும் செய்யக் கூடாது என சொல்ல வருகிறீர்களா?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.
மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது ஏன்? mkstalin eps debate on free laptop
அப்போது எடப்பாடி பழனிசாமி , ”அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது ஏன்?” என்று மற்றொரு கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து ஸ்டாலின் பேசுகையில், மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. நீங்கள் தான் நிறுத்திவிட்டு சென்றீர்கள். நாங்கள் அந்த திட்டத்தை சரிசெய்து மீண்டும் வழங்க உள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறோம். திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடனே வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து தான் இந்த அரசு இருக்கும் என ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். எனவே இந்த விவாதம் தேவையற்றது” என்று ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார்.