அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கிறார் முதல்வர் – சேகர்பாபு

Published On:

| By christopher

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. அதன்படி ஒவ்வொரு நாளும் கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அதன்படி நான்காவது நாளான இன்று (ஜனவரி 12) சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது திருவிடைமருதூர் தொகுதி திமுக எம்எல்ஏ கோவி.செழியன், “நாச்சியார் கோவில் ராமநாதசாமி கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு ஆவணச் செய்யுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ரூ.12 லட்சம் செலவில் 8 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ராமநாதசாமி கோவிலில் இன்னும் 3 மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன் பிறகு பேசிய கோவி.செழியன், ”பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் சேகர் பாபு, ”பழனி கோவிலில் வருகிற 27-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்காக பத்திரிகை முழுக்க, முழுக்க தமிழில் அச்சிடப்பட்டுள்ளது.

தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் 108 ஓதுவார்கள் தமிழிசை வேத மத்திரங்களை முழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குடமுழுக்கு தொடர்பான பத்திரிக்கைகள் தமிழில் அச்சிடுவதற்கு திமுக ஆட்சியே காரணம். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்டோர் நடந்து சென்று தமிழை வளர்த்தனர்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்த்து வருகிறார்.

திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழை வளர்த்து வருகிறது. தேவாரமும் திருவாசகமும் இப்போது அனைத்து கோவில்களிலும் ஒலிக்கின்றன.

அதன்படி பழனி கோவில் குடமுழுக்கிலும் ஆகம விதிப்படி தமிழில் மூல மந்திரங்கள் ஓதப்படும்” என்று அவர் பதிலளித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

வடகிழக்கு பருவமழை ஓய்ந்தது!

சேது சமுத்திர திட்டம்: அதிமுக, காங்கிரஸ் காரசார வாக்குவாதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share