நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்ததாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 20) குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு புள்ளிவிவரத்துடன் ஸ்டாலின் பதிலளித்தார். mkstalin counter attack to eps on 4 murders in single day
தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அவர், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளன. அன்றாட நிகழ்வுகள் போல் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.
சாத்தான் குளம் பிரச்னையை மறந்துவிடக்கூடாது!
இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவர் ஒரே நாளில் 4 கொலைகள் நடந்திருப்பதாக தெரிவித்தார். குற்றங்கள் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நடந்துள்ளது, நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உங்களைப் போல டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் என நான் கூறவில்லை.
அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி சாத்தான் குளம் பிரச்னையை நீங்கள் மறந்துவிடக்கூடாது. சட்டம் ஒழுங்கு பற்றி பேச அதிமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? என ஸ்டாலின் கேள்வி எழுப்ப, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைக்கண்டு ”தைரியம் இருந்தால் என் பதிலை கேட்டு விட்டு வெளியே செல்லுங்கள்” என்று ஸ்டாலின் கூறினார்.
கொலைகள் குறித்து விளக்கம்! mkstalin counter attack to eps on 4 murders in single day
தொடர்ந்து அவர், கோவையில் நடந்த சம்பவம் தற்கொலை என முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. மதுரை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கையில் நடந்த கொலையானது குடும்பத் தகராறில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ஜான், மனைவியுடன் நேற்று காரில் சென்றபோது கொலை நடந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜான் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிகிறது. கொலையாளிகள் சதீஷ், சரவணன், பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
தமிழக சட்ட ஒழுங்கு நிலவரத்தை போகிறப்போக்கில் எதிர்க்கட்சி தலைவர் சொல்லிவிட்டு சென்றுள்ளார். இங்கு சில புள்ளிவிவரங்களை வெளியிட விரும்புகிறேன்.
அதிமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், திமுக ஆட்சியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.
கொலைகளின் எண்ணிக்கை குறைகிறது!
காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. எந்தக் கட்சியினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர் குற்றம் புரிவோர், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. தேவைப்படும் நேரங்களில் குண்டர் சட்டத்தில் ரவுடிகளை கைது செய்கிறோம்.
தமிழக காவல்துறையின் கடும் நடவடிக்கை காரணமாக கொலை குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறது.
எண்ணிக்கையில் பார்கையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு 109 கொலைகள் குறைந்துள்ளன. ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் 214 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனது தலைமையில் காவல்துறை குற்றச் சம்பவங்களைக் கையாள்வதிலும், தடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறோம்” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

கொலையை ஒப்பிட்டு பேசுவது அழகல்ல! mkstalin counter attack to eps on 4 murders in single day
இதற்கிடையே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மு.க.ஸ்டாலின் மாடல் அரசு செயலற்று உள்ளது. தவறுகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
தமிழகத்தில் அன்றாடம் கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுதான் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் சாதனைப் பட்டியல். நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை சம்பவத்தில் புகார் கொடுத்தவரிடம் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது. அதன் விளைவாக அந்த நபர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விளக்கம் அளித்த தினமான நேற்றே ஈரோடு, சேலம், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து பேரவையில் பேசுவதற்கு அவை தலைவர் அனுமதி தரவில்லை. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரி செய்யாமல் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நான் அளிக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் திசை திருப்பும் நோக்கத்திலேயே தமிழக முதல்வர் செயல்படுகிறார். கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிட்டு கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து பேசுவதற்கு எதற்கு ஒரு அரசு இயங்க வேண்டும். நிதிநிலை அறிக்கையை தான் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவார்களே தவிர, கொலை விவரங்களை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவது ஒரு அரசுக்கு அழகல்ல” என எடப்பாடி ஆவேசமாக பேசினார்.