தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சினிமா திரையுலகை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று (ஆகஸ்ட் 24) அறிவிக்கப்பட்டன.
அதில், 2021ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாக ’கடைசி விவசாயி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு பிரிவில் ’கடைசி விவசாயி’ படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று பல்வேறு பிரிவுகளில் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளை வென்றுள்ளனர்.
வாழ்த்தும், பாராட்டும்!
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “ 69வது தேசிய திரைப்பட விருதுக்காக தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசி விவசாயி திரைப்படத்தில் பங்காற்றிய விஜய்சேதுபதி, நல்லாண்டி மற்றும் இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!
மேலும், இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷலுக்கும், ’கருவறை’ ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள ’சிற்பிகளின் சிற்பங்கள்’ படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிர்ச்சி அளிக்கிறது!
மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சந்திராயனுக்கு ஒரு பீரு… சதுரங்கத்துக்கு ஒரு பீரு: அப்டேட் குமாரு
“அரசு செலவில் எனது மகளுக்கு திருமணமா?”: தயாநிதி மாறனுக்கு ஆளுநர் பதில்!
