தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தொடர் பயணத்தில் இருந்து வருகிறார். இன்று (ஜூலை 12) சென்னை மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பிறகு, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்தார்.
இந்த நிலையில் சென்னை திரும்பிய முதல்வர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில்,
“இன்று உடல் கொஞ்சம் சோர்வாக இருந்தது. இதையடுத்து, பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதனால், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்த சில தினங்களுக்கு முதல்வரின் நேரடி சந்திப்புகள், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் முதல்வர் லேசான காய்ச்சலால் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்தார் என்பது நினைவுகூறத் தக்கது.
–ஜெ.பிரகாஷ்