டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தென் மாநிலங்களின் உரிமைகளை அவர் பாதுகாப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுற்று, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளன.
இதில் பா.ஜ.க 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் கட்சிகளின் ஆதரவால் 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
மக்களவை தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலிலும் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவர் 4வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இதற்கிடையே பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பதற்கு ஆதரவளித்துள்ளார்.
அதே சமயம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இரு கூட்டணியின் கூட்டம் முடிந்து இரு மாநிலங்களின் தலைவர்களும் டெல்லி விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு சந்தித்து பேசியுள்ளார். அப்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “டெல்லி விமான நிலையத்தில் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.
அவர் மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன்” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு: கதறும் வாகன ஓட்டிகள்!
IND vs IRE: ஹர்திக் பாண்டியா மிரட்டல்… இமாலய வெற்றி பெற்ற ‘இந்தியா’!