“தமிழகம் என்ன பிச்சைக்கார மாநிலமா?” – அன்று மோடி பேசியதையே திருப்பிக் கேட்ட ஸ்டாலின்

Published On:

| By christopher

mkstalin attack modi speech by his own speech

தமிழ்நாடு மக்கள் உழைத்து ஒன்றிய அரசுக்கு செலுத்திய வரியை பகிர்ந்து தருவதில் ஒன்றிய அரசுக்கு என்ன பிரச்சனை? தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். mkstalin attack modi speech by his own speech

ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 12) திமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறது. அந்த வகையில் திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை வளைந்த முதுகோடு டெல்லியில் அடகு வைத்த அவலம் நடந்தேறியது. அதனால் தான் தமிழக மக்கள் திமுக அரசை தேர்ந்தெடுத்தனர்.

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. எல்லா வகைகளிலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தடைக் கற்களை போட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை யாருக்கும் விட்டுத் தர மாட்டோம். தமிழகம் சிறுமைப்படுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். உயிரே போனாலும் பாஜகவின் பாசிசத்துக்கு அடி பணிய மாட்டோம்.

மோடி முதல்வராக இருக்கும்போது பேசியது…

பிரதமர் மோடி பத்தாண்டுகளுக்கு முன்பு பதவியேற்கும்போது, “டெல்லிக்கு மாநில அரசுகள் காவடி தூக்குவதை மாற்றி, அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவது தான் எனது அணுகுமுறையாக இருக்கும்” என்றார். சொன்னபடி மோடி நடந்துகொண்டாரா? இல்லை. வரிப்பகிர்வு, திட்டங்கள் அறிவிப்பு, திட்டங்களை செயல்படுத்துவதில் எவ்வளவு பாராட்சம் காட்டுகிறார்கள்? இதுதான் மோடியின் கூட்டாட்சி தத்துவமா? அதற்கு மாறாக கூட்டணியில் அல்லாத மாநிலங்களை பழிவாங்கும் அரசியலில் தான் மோடி ஈடுபடுகிறார்.

பிரதமர் மோடி அவர்களே, கடந்த 6.12.2012 அன்று குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது நீங்கள் பேசியது ஞாபகம் இருக்கிறதா? அப்போது, அவர், “குஜராத் மக்கள் 60 ஆயிரம் கோடி அனுப்புறாங்க? ஆனால் எங்கள் மாநிலத்திற்கு திருப்பி கொடுப்பது மிக மிக குறைவு. குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா என்று கேட்டார்.

அதைதான் நான் திருப்பிக் கேட்கிறேன். தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா? நாங்கள் உழைத்து கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

கல்விக் கொள்கை அல்ல.. காவி கொள்கை! mkstalin attack modi speech by his own speech

2000 கோடி அல்ல 10,000 கோடி கொடுத்தாலும் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்பதால் ஒன்றியஅமைச்சருக்கு எரிச்சல். இதன் காரணமாகவே தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கின்றனர். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கிறது.

ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ளது கல்விக் கொள்கை அல்ல.. காவிக் கொள்கை.. அதுவும் இந்தியாவை வளர்க்கும் கல்விக் கொள்கைக்கு பதிலாக இந்தியை வளர்க்கும் காவி கொள்கைக்கு ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. 3, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்து வடிகட்டப் பார்க்கிறார்கள். மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கு பதிலாக, அவர்களை நீக்குவதற்கு திட்டமிடுகிறது பாஜகவின் கல்விக்கொள்கை. இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்க பாருங்கள் பிரதமர் மோடி.

அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய அரசுதான். உரிமை குரல் எழுப்பினால் நாகரீகம் அற்றவர்கள் என்கிறார்கள். உலகிற்கே நாகரிகத்தைச் சொல்லிக் கொடுத்தது தமிழகம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டை இந்த உலகிற்கு சொன்னது தமிழ்நாடு.

உரிமைகளைக் கேட்டால் தொகுதிகளை குறைப்போம் என்கிறார்கள். தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு 8 தொகுதிகள் பறி போகும். இது உரிமை சார்ந்த பிரச்சனை. கேள்வி எழுப்பினால் தொகுதிகளை குறைப்போம் என்று எதேச்சாதிகாரத்தை பாஜக அரசு கொண்டு வருகிறது. பாஜகவின் பாசிச நடவடிக்கைக்கு எதிராக அணி திரட்டி வெற்றி பெறுவோம். அணி திரண்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழ்நாடு போராடும்.

திமுகவும் தமிழ்நாடும் அடிபணியாது! mkstalin attack modi speech by his own speech

மணிப்பூர் பற்றி எரிகிறது அதனை கட்டுப்படுத்த ஒரு துரும்பை கூட ஒன்றிய அரசு கிள்ளிப் போடவில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. அதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் சமஸ்கிருதத்தை வளர்ப்போம் என்கிறார்கள். எத்தனை கோடி செலவிட்டாலும் சமஸ்கிருதத்தை வளர்க்க முடியாது. இப்போதும் சொல்கிறேன் தமிழகத்தில் இந்தியை எந்த காலத்திலும் திணிக்க முடியாது.

முந்தைய ஆட்சியில் தமிழக உரிமைகள் டெல்லியில் அடகு வைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். நமது திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. திமுகவின் உண்மையான குணத்தை காட்ட வேண்டிய நேரம் இது. எனவே எந்த காலத்திலும் பாஜகவின் பாசிச அணுகுமுறைக்கு திமுகவும் தமிழ்நாடும் அடிபணியாது” என்று ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share