தமிழகத்தில் 2 கோடி குடும்பத்திலும் திமுக உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சியினருக்கு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளார். mkstalin assignment to join new member in dmk
மதுரையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்பதற்காக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தை கட்சியினர் மத்தியில் அறிவித்தார் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக கட்சியினருக்கு இன்று (ஜூன் 2) எழுதிய கடிதத்தில், ’ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும். அவர்கள் திமுக அரசு தொடர வேண்டும் என விரும்புவார்கள்.
அப்படி விரும்புகிறவர்களை உறுப்பினர்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு வாக்காளர்களாவது கழக உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
உடன்பிறப்புகளான உங்களை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்” என தெரிவித்தார்.
திமுகவில் அடுத்த தலைமுறையையும் கருத்தில் கொண்டு அதிகளவில் இளைஞர்களை சேர்க்க கட்சியினரிடத்தில் புதிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
குறிப்பாக, திமுகவில் சேரும் உறுப்பினர்கள் யாராவது விபத்தில் உயிரிழந்தால், அந்த குடும்பத்தில் 21 வயதிற்குட்பட்ட குடும்ப உறுப்பினரின் வங்கி கணக்கிற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது கட்சியில் இணைவார்கள். அதன்படி சுமார் 2 கோடி குடும்பத்திலும் 2 கோடி பேர் திமுகவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அதுவே நமக்கு பெரிய வெற்றி.
ஏற்கெனவே திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் மாதம் 40 நபர்களுக்கு மருத்துவ உதவியும், கல்வி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் திமுக கட்சி நிதியில் இருந்து மாதம் மருத்துவ உதவி தேவைப்படும் நபருக்கு அந்தந்த மாவட்ட செயலாளரின் பரிந்துரை அடிப்படையில் 2 லட்சம் வரையில் மருத்துவ நிதியுதவி வழங்கி வருகிறது.
இவையெல்லாம் தான் மக்களிடத்தில் நிர்வாகிகள் கொண்டு செல்ல இருக்கிறார்கள் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.
